×

ஆப்கனுக்கு எதிராக கடைசி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

சவுத்தாம்ப்டன்: உலக கோப்பை லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த இந்தியா 11 ரன் வித்தியாத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ரோகித் 1 ரன் மட்டுமே எடுத்து முஜீப் உர் ரகுமான் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. 2வது விக்கெட்டுக்கு ராகுல் - கோஹ்லி ஜோடி 57 ரன் சேர்த்தது. ராகுல் 30 ரன் (53 பந்து, 2 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்ப, விஜய் ஷங்கர் உள்ளே வந்தார். அவர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மறுமுனையில் கோஹ்லி அரை சதம் அடித்து அசத்தினார். ஷங்கர் 29 ரன் (41 பந்து, 2 பவுண்டரி), கோஹ்லி 67 ரன் (63 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். இந்தியா 30.3 ஓவரில் 135 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், டோனி - கேதார் ஜோடி பொறுப்புடன் விளையாடி 57 ரன் சேர்த்தது. டோனி 28 ரன் எடுத்து (52 பந்து, 3 பவுண்டரி) ரஷித் கான் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 7 ரன், முகமது ஷமி 1 ரன்னில் வெளியேற, கேதார் ஜாதவ் 52 ரன் (68 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி குல்பாதின் பந்துவீச்சில் மாற்று வீரர் நூர் அலி வசம் பிடிபட்டார். இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஆப்கன் வீரர்கள் மிக பொறுமையாக ஆடினர். 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் சேர்க்க அந்த அணியின் கை ஓங்கியது. இந்திய அணி நெருக்கடியில் சிக்கிய நிலையில், 29வது ஓவரில் ரஹமத் ஷா (36), ஹஸ்மதுல்லா (21) ஆகிய இருவரையும் பூம்ரா வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், ஒருமுனையில் முகமது நபி நங்கூரமிட்டு விளாச, கடைசி 2 ஓவரில் 21 ரன் எடுத்தால் ஆப்கன் வெற்றி என்ற பரபரப்பான நிலைக்கு ஆட்டம் வந்தது.

49வது ஓவரில் பூம்ரா 5 ரன் தர, கடைசி ஓவரில் 16 ரன் தேவை என்றானது. ஷமி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை நபி பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை கடந்தார். 2வது பந்தில் ரன் எடுக்காத நிலையில், 3வது பந்தில் ஹர்திக் வசம் பிடிபட்டு நபி (52) ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த பந்துகளில் அப்தாப் (0), முஜீப் (0) இருவரையும் கிளீன்போல்டாக்கி ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் 213 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 4வது வெற்றியை பெற்றது. ஷமி 4, பூம்ரா, சாஹல், ஹர்திக் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பூம்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 1987ல் சேத்தன் ஷர்மாவுக்கு பிறகு 32 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி படைத்தார்.


Tags : India ,Shami ,Afghanistan , Shami, Hatrick Wicket, India, Afghanistan
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...