×

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது... நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2019-2022ம் ஆண்டுக்கான நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் தொடங்கியது. நாசர் தலைமையில் பாண்டவர் அணி, கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகின்றன. மொத்த வாக்குகள் 3,644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எண்ணிக்கை 3,171. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

முன்னதாக, வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து, சங்க பதிவாளர் உத்தரவிட்டார். உடனே விஷால் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ‘வாக்காளர் பட்டியலில் குளறுபடி இல்லை. தேர்தலை நிறுத்தி வைக்க, சங்கத்தின் மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் கிடையாது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு யாரும் அதில் தலையிட முடியாது. அறிவித்தபடி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘தேர்தலை நிறுத்தி வைப்பதற்கு முன், விஷால் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. மாவட்ட பதிவாளருக்கு தேர்தலை நிறுத்த அதிகாரம் உள்ளது’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, தேர்தலை நிறுத்த பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், ‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது.

தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கக்கூடாது’ என்று சொல்லி, வழக்கு விசாரணையை வரும் ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று சென்னையில் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. வெளியூரில் இருப்பவர்கள் நேற்றே சென்னைக்கு வந்து விட்டனர். தேர்தலையொட்டி இன்று ஒருநாள் அனைத்து தமிழ் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Voting ,South Indian Actors Association ,election , South Indian Artistes Association, voting, Nasser, Vishal, Bhagyaraj, Ishari Ganesh, Mylapore, police protection
× RELATED 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்...