×

ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நாமக்கல்: நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை ஐஓசி, எச்பிசி, பிபிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, தென்மண்டலங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு(சிலிண்டர் உற்பத்தி மையங்கள்) சமையல் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஆண்டு முடிந்த புதிய வாடகை ஒப்பந்த டெண்டரில் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான 740 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த பிரச்னை குறித்து கடந்த 20ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பெதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், 740 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்காத ஆயில் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பொன்னம்பலம், ஆயில் நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “கடந்த 20ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி 3 ஆயில் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் உள்ள வாகனங்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.

இல்லாவிட்டால், வரும் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டலங்களில் தற்போது 4800 எல்பிஜி டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் 1ம் தேதி முதல் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கினால், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.

Tags : LPG tanker truck owners ,strike ,states , On July 1, LPG tanker lorry, owners, strike, Cass in 6 states
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து