×

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு கால்நடைகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: திருத்துறைப்பூண்டி அருகே பரபரப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று கால்நடைகளுடன் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த திட்டம்  செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். எனவே, மத்திய, மாநில  அரசுகளை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் சில நாட்களுக்கு முன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் கால்நடைகளுடன் ஜூன் 22ம் தேதி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை கொத்தமங்கலம் ஊராட்சி பள்ளங்கோவில் சுமை தாங்கி என்ற இடத்தில் போராட்டக்குழு தலைவர் தியாகராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள், அந்த பகுதியில் உள்ள வயலில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷம்  எழுப்பினர். மேலும் ஆடு, மாடுகளையும் அழைத்து வந்து அவற்றின் கழுத்தில் திட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி தொங்க விட்டிருந்தனர்.


Tags : protest , Hydrocarbon project, protest, livestock, field down, farmers, demonstration
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...