×

வாடிப்பட்டி அரசு பள்ளியில் அமைச்சரிடம் லேப்டாப் கேட்க வந்த மாணவிகள் வகுப்பறையில் சிறைவைப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

வாடிப்பட்டி: அமைச்சரிடம் லேப்டாப் கேட்டு வந்த முன்னாள் மாணவிகள் வகுப்பறையில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் வாடிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கினார்.

அப்போது அங்கு 2017-18ம் ஆண்டில் படித்த பிளஸ் 2 மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள், தங்களுக்கு லேப்டாப் தராமல், 2018-19, 2019-20ம் ஆண்டு மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படுவதாகவும், தங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்றும் கூறி அமைச்சர் உதயகுமாரிடம் முறையிட முயன்றனர்.

இதனை பார்த்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவிகளையும், அவர்களது பெற்றோரையும் அருகிலிருந்த வகுப்பறை ஒன்றில் அடைத்தனர். இதனால் மாணவிகள் வெளியே விடுமாறு கூச்சலிட்டனர். இவர்கள் வெளியே செல்லாதவாறு சுற்றிலும் போலீசார் மறித்து கொண்டு நின்றிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து மாணவிகளுடன் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம், சமயநல்லூர் டிஎஸ்பி மோகன்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் சிறை பிடிக்கப்பட்ட மாணவிகள், சீனியாரிட்டி முறைப்படி தங்களுக்கு தான் முதலில் லேப்டாப் வழங்க வேண்டும். தங்களை வகுப்பறையில் இருந்து வெளியேற்றி அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகள் சுமார் 45 நிமிடம் வகுப்பறையிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தனர். விழா முடியும் வரை அவர்களை விடுவிக்கவில்லை. தகவலறிந்து விழா முடிந்து வந்த அமைச்சர் உதயகுமார், மாணவிகளிடம், ‘‘இன்னும் ஒரு வாரத்தில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தால் வாடிப்பட்டி அரசு பள்ளியில் சுமார் 1 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Wadipatti ,government school ,Prisoners ,classroom , Wadipatti, Government School, Minister, Laptop, Students, Classroom, Prison
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...