×

அதிபர் சிறிசேனா உத்தரவு இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

கொழும்பு: இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய  மனித வெடிகுண்டு தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் எனவும் உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து, நாடு முழுவதும் அதிபர் சிறிசேனா அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன்மூலம், சந்தேகத்துக்குரிய நபர்களை எந்த நேரத்திலும் கைது செய்யவும், விசாரணை நடத்தவும் காவல்துறை, ராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 10 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அதிபர் சிறிசேனா, இலங்கையில் ஜூன் 22ம் தேதியுடன் அவசரநிலை திரும்பப் பெறப்படும். என உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெனரல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாலும், பொது மக்களின் பாதுகாப்பு கருதியும் அவசரநிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக அதிபர் சிறிசேனா புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்றுடன் முடிந்த அவசரநிலை பிரகடனம், இந்த உத்தரவு மூலம் அடுத்த மாதம் 22ம் தேதி வரை அமலில் இருக்கும்.

Tags : Emergency ,Sri Lanka , Chancellor of Sri Lanka, Emergency, one month extension
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...