×

சித்தப்பாவுக்கு திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பதவியை கொடுத்தார் ஜெகன்

திருமலை: ‘‘திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புனிதத் தன்மை காப்பாற்றப்படும்’’ என்று புதிதாக பதவியேற்ற அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று காலை 11.45 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கருடாழ்வார் சன்னதி அருகே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் கோயிலில் உள்ள அனைத்து இடங்களையும் அறங்காவலர் குழுத் தலைவருக்கு தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் காண்பித்தார். இதில் மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படும் நகைகள் வைக்கக்கூடிய நகை பாதுகாப்பு இடம், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, சுவாமிக்கு நெய்வேத்தியம் தயார் செய்யும் மடப்பள்ளி  உட்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.

இதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில், ‘‘ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு ஊழலற்ற நேர்மையான அரசு நிர்வாகம்  செயல்படுவதே லட்சியமாக உள்ளார். அதன்படி சிறப்பான ஆட்சியை அவர் அமைத்து வருகிறார். திருப்பதியில் இந்து தர்மத்தை காப்பாற்றும் விதமாகவும் திருமலையின் புனிதத்தன்மை, ஆகம விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு எந்த விதத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளிக்க முடியுமோ அவ்வாறு செய்வோம்’’ என்றார்.

ஆந்திராவில் முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்றதும், அமைச்சர் பதவி அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த ரோஜாவுக்கு புது பதவி அளித்து அவரை சமரசம் செய்தார். இதேபோல், அவரது சித்தப்பா முறையான சுப்பாரெட்டியும் பதவி கிடைக்காததால் ஒதுங்கியிருந்தார். அவருக்கு அமைச்சர் அந்தஸ்திலான திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பதவியை அளித்து சமரசம் செய்துள்ளார்.

Tags : Jagan ,Tirupati Board of Trustees , Siddappa, Tirupathi, Chairman of the Board of Trustees, Jagan
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...