×

சவரன் மேலும் ரூ.176 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.27,000ஐ எட்டும்

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.176 அதிகரித்தது. இந்த நிலை தொடர்ந்தால் சவரன் ரூ.27,000ஐ தொடக்கூடும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் கடும் ஏற்றம், இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி தங்கம் சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.25,288க்கு விற்பனையானது.

இது இந்த மாதம் தொடங்கிய பிறகு அதிகபட்ச உயர்வாக கருதப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து சவரன் ரூ.25,000க்கு மேல் விற்பனையாகி வந்தது. கடந்த 20ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.528 அதிகரித்து கிராம் ரூ.3,213க்கும், சவரன் ரூ.25,704க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது தங்கம் விலையில் புதிய உச்சமாகும். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 20ம் தேதி தான் சவரன் ரூ.25,808க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, சவரனுக்கு ரூ.464 உயர்ந்து கிராம் ரூ.3,271க்கும் சவரன் ரூ.26,168க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சவரன் ரூ.464 அளவுக்கு உயர்ந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், மாலையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை சற்று குறைந்தது.

அதாவது, மாலையில் சவரனுக்கு ரூ.272 குறைந்து, ஒரு கிராம் ரூ.3237க்கும், சவரன் ரூ.25,896க்கு விற்பனையானது. 2 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 அளவுக்கு தங்கம் விலை அதிகரித்தது. இந்நிலையில், நேற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3259க்கும், சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ஒரு சவரன் ரூ.26,072க்கும் விற்பனையானது.

இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். ஆதலால் நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை தங்கம் மார்க்கெட் தொடங்கியதும் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும். இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற ஒரு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சவரன் ரூ.27,000 தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.

Tags : Shaving, increase, gold price, reach Rs 27,000
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...