கட்சி தாவல் சரியா?

மாநிலங்களவையில் தனது பலத்தை அதிகரிக்கும் செயலில் பா.ஜ. ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் ஆந்திராவில் நடந்துள்ள கட்சித் தாவல் நிகழ்வு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 6 பேரில் 4 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் சேர்ந்துள்ளனர். இதனால், அவர்கள் மீது கட்சி தாவல் சட்டம் பாயவில்லை. அதனால் அவர்களின் பதவி பறிபோகவில்லை.

மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. இப்படி சிறிய கட்சிகளின் எம்.பி.க்களை வளைத்துப் போட்டு தனது பலத்தை அதிகரிக்க பா.ஜ. திட்டமிட்டு செயல்படுகிறது. இது ஜனநாயகத்தில் கருப்பு அத்தியாயம் என்று எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளன. கொள்கை அடிப்படையில் ஓர் கட்சியில் பிளவு ஏற்பட்டால் அது தவிர்க்க முடியாது. ஆனால், சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி, அதனால் ஆதாயம் பெற நினைப்பது, பெரிய கட்சிக்கு கவுரவம் சேர்க்காது என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறியுள்ளன.

‘தெலுங்கு தேசம் மாநிலங்களவைக் குழுவை பாஜவுடன் இணைப்பதற்கு எவ்வித மறுப்பும் இல்லை’ என்று பாஜ தேசிய தலைவர் அமித் ஷா ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில், 75 (4 தெலுங்கு தேசம் எம்பிக்கள் உட்பட) எம்பிக்களைக் கொண்டு பாஜ தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

மொத்தமாக பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 105 உறுப்பினர்கள் உள்ளனர். மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. இருப்பினும் மாநிலங்களவையில் பாஜ கூட்டணி பெரும்பான்மை பலம் பெற 18 உறுப்பினர்கள் குறைவாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 66 இடங்கள்; மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 66; காலியாக 9 இடங்கள் உள்ளன.

மாநிலங்களவையில் பாஜவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், மற்ற கட்சி எம்பிக்களை வளைக்கும் பணியில் பாஜ கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 எம்பிக்கள் பாஜவில் இணைந்ததற்கு எதிராக துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவிடம் தெலுங்கு தேசம் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

அதில், ‘தெலுங்கு தேசம் எம்பிக்கள் 4 பேர் பாஜவில் இணைய அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை; அரசியல் ஆதாயம், சுயநல நோக்கில் நடந்துள்ள இந்த கட்சித் தாவலை அங்கீகரிக்கக் கூடாது. அவர்களை விரைவில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதுவே ஜனநாயகத்தில் முதிர்ச்சியான நடவடிக்கையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளனர். இவர்களின் வாதத்தில் நியாயம் உள்ளது என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் கருத்தாக உள்ளது.

× RELATED சொல்லிட்டாங்க....