தமிழகத்தின் குடிநீர் பஞ்சம் தெரியாது: அதிமுக எம்பி ரவீந்திரநாத் பதிலால் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது தனக்கு தெரியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அதிமுகவின் ஒரே மக்களவை எம்பியுமான ரவீந்திரநாத் கூறியிருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலிக்குடங்களுடன் தொலைதூரம் சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாத ஒரு ஆபத்தான நிலை உருவாகிவிட்டது. தமிழகம் முழுவும் இதே நிலை நீடித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வரும் ஆண்டில் சென்னை தண்ணீர் இல்லாத பகுதியாக மாறிவிடும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ள கருத்து பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அளவுக்கு குடிநீர் பஞ்சம். நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டது. சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய அனைத்து ஏரிகளும் வற்றி “ஜீரோ” நிலைக்கு மாறியுள்ளன. இந்த நெருக்கடியான நிலைய சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகிறார்கள். ஆனால், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தண்ணீர் பஞ்சம் இல்லை.

அவர்களின் வீடுகளுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினமும் லாரிகளில் செல்கிறது. பொதுமக்கள் தண்ணீருக்காக படும்பாட்டை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தண்ணீர் பிரச்னை தீரும் என்று பொத்தாம் பொதுவாக பேட்டியளித்து வருகிறார்கள். இந்நிலையில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் வீடுகளுக்கு தண்ணீர் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதை தினகரன் நாளிதழ் படம்பிடித்து செய்தி வெளியிட்டது. இந்த தகவல் மற்ற ஊடகங்களுக்கும் பரவியது.

இதையடுத்து, தனியார் ஆங்கில செய்தி சேனல் நிருபர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினருமாகிய ரவீந்திரநாத் குமாரை தொடர்பு கொண்டு தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பேசினர். அதற்கு ரவீந்திரநாத் தனக்கு தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பது தொடர்பாக தெரியாது என்று பதிலளித்துள்ளார். இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில செய்தி சேனல் நிருபர் கேட்ட கேள்விகளும் அதற்கு ரவீந்திரநாத் எம்.பி. அளித்த பதிலையும் பார்ப்போம்.

நிருபர்:  முதல் அமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லையே. இதற்கு, அதிமுக கட்சியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே எம்பியான உங்களின் பதில் என்ன?

ரவீந்திரநாத் எம்.பி.: முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் தண்ணீர் பிரச்னையை போக்குவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விரைவில் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும்.

நிருபர்: மிக விரைவில் தண்ணீர் பிரச்னை தீரும் என்கிறீர்கள். ஆனால் மக்கள் தற்போது தண்ணீருக்கு திண்டாடி வருகிறார்கள். உங்கள் வீட்டுக்கு லாரியில் தண்ணீர் செல்வதை பாருங்கள். தினமும் 3 முறை 9000 லிட்டர் தண்ணீர் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோர் வீடுகளுக்கு தண்ணீர் செல்வதை பார்க்கிறோம்.

ரவீந்திரநாத் எம்.பி. : தமிழகத்தில் தற்போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது.

நிருபர்: நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது என கூறுவது ஆச்சரியமளிக்கிறது.

ரவீந்திரநாத் எம்.பி.: இப்போதுதான் ஜனாதிபதி உரை மீது பேசிவிட்டு வருகிறேன்.

நிருபர்: ஐந்து நிமிடங்களுக்கு முன்போ, 20 நிமிடங்களுக்கு முன்போ பேசி முடித்து வரலாம். ஆனால், தமிழகத்தில் இந்த நிலை ஆண்டு முழுவதும் நிலவுகிறது உங்களுக்கு தெரியாதா?.

ரவீந்திரநாத் எம்.பி.: நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் இப்போது டெல்லி வந்துள்ளார். அவரிடம் பேசிவிட்டு பதிலளிக்கிறேன்.

நிருபர்: நீங்கள் பின்னர் வந்து தெரிவிப்பதால் ஒரு பயனும் இல்லை. இப்போதே பதில் சொல்லுங்கள்.

ரவீந்திரநாத் எம்.பி.: நன்றி.

நிருபர்: உங்கள் நன்றியால் எதையும் செய்துவிட முடியாது. சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் திணறிக்கொண்டிருக்கிற நேரத்தில் துணை முதலமைச்சரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அமைச்சர்கள் வீட்டுக்கு 12 ஆயிரம் லிட்டர் கொண்ட 2 லாரிகள் தினமும் செல்கிறது.

இந்த ஆதார வீடியோவை காட்டிய பிறகும் நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு தெரியாது என்று கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. இப்படித்தான் அதிமுகவினர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.இவ்வாறு அந்த தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது.

Tags : Raveendranath ,AIADMK , Tamil Nadu, Drinking Water
× RELATED சுகாதார பணிகள் எம்.பி.,ஆய்வு