×

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த யாகத்துக்கு பிறகு மழைக்காக அதிமுகவினர் திடீர் யாகம்

சென்னை: ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள் யாகம் நடத்தினர். இதன்பிறகு நீண்டநாட்களுக்கு பிறகு மழை வேண்டி அதிமுகவினர் நேற்று தமிழகம் முழுவதும் யாகம் நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். அவருக்கு என்ன நோய் மற்றும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என்று அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் ஆதங்கப்பட்டனர்.

அவர் சிகிச்சை பெறுவதுபோன்ற படமும் வெளியிடப்படவில்லை. அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், அதிகாரிகள் என யாரையும் மருத்துவமனைக்குள் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. நீண்டநாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அதிமுகவினர், ஒருவித பயத்துடன் இருந்தனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று சிறப்பு யாகம் நடத்தினர். அதிமுக பெண் அமைச்சர்கள், நிர்வாகிகள் தீச்சட்டி ஏந்தி கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அதாவது 2016 டிசம்பர் மாதத்துக்கு பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று தமிழகம் முழுவதும் தமிழகம் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தமிழகத்தில் மழை வேண்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் யாகம் நடத்தி ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினர்.

வழக்கமாக அதிமுக தரப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது என்றால் அக்கட்சி தலைமை கழகம் சார்பில் பத்திரிகை வாயிலாக அறிக்கை கொடுக்கப்படும். இதன்மூலம் இந்த நிகழ்ச்சி குறித்து அதிமுக தொண்டர்கள் தெரிந்து கொள்வார்கள். ஆனால், நேற்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்தயாக நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு (வாய்மொழி) பிறப்பித்துள்ளனர். அதன்படியே நேற்று மழை வேண்டி இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் யாகம் நடத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை ரகசிய உத்தரவு மூலம் அறிவித்ததால், அதிமுக தொண்டர்களுக்கு இந்த நிகழ்ச்சி பற்றி எதுவுமே தெரியாததால் குழப்பம் அடைந்தனர். இதுபற்றி நேற்று காலைதான் பலருக்கு தெரியவந்ததால் யாகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்துவிட்டதாக கூறினர். அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்ததால் தொண்டர்கள் யாகம் பற்றி எதுவும் தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

Tags : hospital ,accident , Jayalalithaa, hospital, rain, ammunition, sudden death
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...