×

போலி தண்ணீர் கம்பெனிகள் மீது உடனடி நடவடிக்கை

* உற்பத்தியாளர்களுக்கு கிடுக்கிப்பிடி
* உணவு பாதுகாப்பு துறை அதிரடி

சென்னை: போலி தண்ணீர் கம்பெனிகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அந்த கம்பெனிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா கூறியுள்ளார். உணவு பாதுகாப்பு துறை சார்பில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்களுக்கான கூட்டம் பல்லாவரத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்தில் குடிநீர் உற்பத்தியாளர்கள் 182 பேர் கலந்துகொண்டனர்.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா பேசியதாவது:
மக்களுக்கு தரமான குடிநீரை வழங்க வேண்டும். சுத்தம் சுகாதாரம் என்பது முக்கியம். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கேன்கள் சுத்தமாக இருக்க வேண்டும். குடிநீர் கேன்களின் லேபிள்களில் உற்பத்தி செய்யப்படும் தேதியை உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். உற்பத்தி செய்யப்படும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.

முக்கியமாக ஐ.எஸ்.ஐ தரச்சான்று, எப்.எஸ்.எஸ்.ஐ லைசென்ஸ், ஆழ்துளை கிணறுகள் வைத்திருந்தால் அதற்கான சான்று, எவ்வளவு தண்ணீர் உற்பத்தி செய்ய தடை இல்லா சான்று வாங்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். இதேபோல், ஒரு கேனில் ஒரு ஸ்டிக்கர் மட்டுமே இருக்க வேண்டும்.

குறிப்பாக, எந்த கம்பெனியின் தண்ணீர் கேனில் நிரப்பப்படுகிறதோ அந்த கம்பெனியின் ஸ்டிக்கர் மட்டுமே அதில் இருக்க வேண்டும். 20 லிட்டர் கேனில் லேசர் பிரிண்டிங்கில் உற்பத்தி தேதி கண்டிப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் கேன் கொண்டுபோய் கொடுப்பவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதேபோல், தண்ணீர் எடுத்து செல்பவர்களும், விற்பனை செய்பவர்களும் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உற்பத்தியாளர்கள் எடுத்துக்கூற வேண்டும். சான்றிதழ் இல்லாமல் நடத்தினால் உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதற்காக 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 94435 20332 உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலருக்கு புகார் அளிக்கலாம். போலியாக செயல்படும் தண்ணீர் கம்பெனிகள் குறித்தும் இந்த எண்களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, போலி கம்பெனிகள் குறித்து மாதத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 10 முதல் 12 வரையிலான புகார்கள் வருகிறது. இவ்வாறு பேசினார். பொதுமக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

Tags : water companies , Fake Water, Companies, Action
× RELATED ஆம்பூர் அருகே உரிமம் இன்றி செயல்பட்ட 3 வாட்டர் கம்பெனிகளுக்கு சீல்!