பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடிகர் சங்க தேர்தல்: மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடக்கிறது. அதற்கான உத்தரவை நேற்றிரவு உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், தேர்தல் நடக்கும் பகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ல் இதே பள்ளியில்தான் நடிகர் சங்க தேர்தல் நடந்தது.

2019-2022ம் ஆண்டுக்கான நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. நாசர் தலைமையில் பாண்டவர் அணி, கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகின்றன. மொத்த வாக்குகள் 3,644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எண்ணிக்கை 3,171. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.முன்னதாக, வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து, சங்க பதிவாளர் உத்தரவிட்டார். உடனே விஷால் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ‘வாக்காளர் பட்டியலில் குளறுபடி இல்லை. தேர்தலை நிறுத்தி வைக்க, சங்கத்தின் மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் கிடையாது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு யாரும் அதில் தலையிட முடியாது. அறிவித்தபடி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘தேர்தலை நிறுத்தி வைப்பதற்கு முன், விஷால் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. மாவட்ட பதிவாளருக்கு தேர்தலை நிறுத்த அதிகாரம் உள்ளது’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, தேர்தலை நிறுத்த பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், ‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது.

தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கக்கூடாது’ என்று சொல்லி, வழக்கு விசாரணையை வரும் ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று சென்னையில் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதில் அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நாடக கலைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். வெளியூரில் இருப்பவர்கள் நேற்றே சென்னைக்கு வந்து விட்டனர். தேர்தலையொட்டி இன்று ஒருநாள் அனைத்து தமிழ் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

துணை முதல்வருடன் சந்திப்பு:
தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அப்போது நாசர் கூறுகையில், ‘’நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டோம். அவர் நடிகர் சங்கம் குறித்து முழுமையாக கேட்டறிந்தார்’’ என்றார்.

Tags : Actor ,election , Thrilling Situation Today, Actor's Election
× RELATED கத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய்,...