×

மக்களின் பார்வையில் இந்த வார பிரச்னைகள்

பார்க்கிங் வசதி எங்கே?
ஆலந்தூர் எம்கே சாலை, ஆதம்பாக்கம், கருணீகர் தெரு, போன்ற  பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்களில் பார்க்கிங் வசதி இல்லை.  இதனால் வாகன ஓட்டிகள் சாலையிலேயே வாகனங்களை விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பார்க்கிங் வசதி இல்லாத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும். -கோ.பிரவின்குமார், சிசிடிவி ஆப்பரேட்டர், ஆலந்தூர்

முதல்ல...ரோட்டப்போடுங்க..
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1வது பகுதிக்கு உட்பட்ட 46 மற்றும் 48 வது தெருக்கள், அதை சுற்றியுள்ள குறு தெருக்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை போடப்படாமல் உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்பட்டு சென்று வருகின்றனர். எனவே இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  -எல்.இஸ்மாயில், ஜவுளிக்கடை உரிமையாளர், ஆவடி

லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்
கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் பஞ்சாயத்திடம்  அனுமதி பெற்று தங்களது நிலத்தை விற்றுவந்தனர். ஆனால் தற்பொழுது பதிவுத் துறை நிர்வாகம் ஊராட்சிகளில் உள்ள நிலத்தை விற்க வேண்டும் என்றால் அதற்கு டிடிசிபியில் அனுமதி வாங்க வேண்டுமென கூறுகின்றனர். இதைவாங்கி வாங்க சென்றால் அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். - க.வரதன். நிலத் தரகர், கும்மிடிப்பூண்டி

குப்பைகளால் துர்நாற்றம்
அச்சிறுப்பாக்கத்தில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம்.  இந்த சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களால் சந்தை வளாகத்தில் கொட்டப்படும் குப்பை உடனடியாக அகற்றப்படுவதில்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகுதான் அகற்றப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.-தாட்யாயணி, குடும்பத் தலைவி, அச்சிறுப்பாக்கம்


உப்பு நீராக மாறிப்போன நிலத்தடிநீர்
சூனாம்பேடு ஊராட்சிக்கு தோட்டச்சேரி கிராம பகுதியில் உப்பளத்தை சுற்றி ஆங்கிலேயோர் காலத்தில் மழைநீரை சேமிப்பதற்காக வெட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் முழுவதும் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் உப்பு நீருடன் கலந்து குடிநீர் உப்பு நீராக மாறி வருகிறது. எனவே தூர்ந்துபோன கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -உமாநாத்,  சூனாம்பேடு


10 நாளுக்கு ஒரு முறைதான் தண்ணீர்
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட ரேடியோ மலைப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்குகின்றனர். அதுவும் ஒரு மணி நேரம் தான் விடுகிறார்கள். பாத்திரத்தில் பிடித்து மூடி வைத்தாள்  5 நாட்களுக்கு பிறகு தண்ணீரில் பூச்சி வருகிறது. மோட்டார் பைப் லைன் பழுது ஏற்பட்டால் அதோகதிதான். -கிருஷ்ணவேணி, பூ வியாபாரி, ரேடியோ மலை

பள்ளங்களை மூடாததால் அவதி
குரோம்பேட்டை கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இராஜேந்திர பிரசாத்  சாலையில் 15 மாதங்களுக்கு முன்பாக குடிதண்ணீருக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியான முறையில் சமன்படுத்தவில்லை. இதைப்பற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் ஒருவருக்கு கணுக்காலுக்கு கீழ்பகுதி முழுவதுமாக நசுங்கி விட்டது. -சந்தானம், ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர், குரோம்பேட்டை

விவசாயிகள்,நெசவாளர்கள் அவதி
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்டங்களில் விசைத்தறி நெசவாளர்கள், விவசாயிகள் அதிகம் வசித்து வருகின்றனர். ஜி.எஸ்.டி வரியால் தொழில் மிகவும் நசுங்கி போயுள்ளது. இதனால் விசைத்தறி நெசவாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். வேலை வாய்ப்பு இல்லாததால் சமையல் வேலை, சப்ளையர் வேலை, செக்யூரிட்டி வேலைக்கு செல்கின்ற அவலநிலை உள்ளது. - சண்முகம், லுங்கி உற்பத்தியாளர், அம்மையார் குப்பம்

மின்விளக்கு எரியாததால் விபத்துகள்
நல்லூர் சுங்கச்சாவடி ஜிஎன்டி சாலையிலிருந்து சோழவரம் காரனோடை மேம்பாலம் மற்றும் சோழவரம் பைபாஸ் சாலை வரையுள்ள சாலைகளில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.  மேலும் இந்த கனரக வாகனங்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. -ஆனந்த்குமார், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர், செங்குன்றம்

ஆம்புலன்ஸ் கூட வரமுடியவில்லை
மணலி சாலையை இணைக்கும் மகாலட்சுமி நகர் பிரதான சாலை பல ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. சாலை அமைக்க வேண்டும் என்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. -கதிர்வேல், தனியார் நிறுவன ஊழியர், எர்ணாவூர்

உப்பு தண்ணீரால் நோய்கள்
எங்கள் கிராமத்தில் 4 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தோம். இவற்றில் இருந்த மின் மோட்டார்களை நிர்வாகம் கட்டி எடுத்துக் கொண்டது. இதில் ஒரு மின் மோட்டாரை மட்டுமே மீண்டும் பொருத்தி உப்பு தண்ணீர் விநியோகம் செய்கின்றனர். இந்த நீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் வருகிறது.  - மனோகரன், மோட்டார் மெக்கானிக், தெக்கலூர்

வீட்டுமனை பட்டாகொடூப்பீங்களா?
அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வேறு இடத்துக்கு மாற்றம் செய்த 546 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல் அத்திப்பட்டு பகுதியிலும்  160 பேருக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் எந்தவித அரசு நிதி உதவிகளையும் பெற முடியவில்லை. -எம்.டி.ஜி.கதிர்வேல், முன்னாள் ஊராட்சி தலைவர், அத்திப்பட்டு

கூடுதல் பஸ்வசதி வேண்டும்
திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது.  மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக கிரிவலம் வருவதற்கு உகந்த ஆலயமாக இது விளங்குவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். எனவே பக்தர்களின் நலன் கருதி பௌர்ணமி தினத்தில் கூடுதல் பேருந்து இயக்கம் வேண்டும்.-ப.தாண்டவராயன், சமூக ஆர்வலர், திருக்கழுக்குன்றம்

2 ஆண்டுகளாக நிலவும் தண்ணீர் பஞ்சம்
பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாகவே தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. நகராட்சி சார்பில் விநியோகிக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. தற்போது ஒரு லாரி தண்ணீர் 3 ஆயிரம் வரை கொடுத்து தனியாரிடம் வாங்குகிறோம். நகராட்சி சார்பில் குறைந்த விலைக்கு தண்ணீர் விற்றால் பொதுமக்களின் பிரச்சனை தீரும். - விநாயகம், தனியார் நிறுவன ஊழியர், கரையான்சாவடி

தோட்டத்திற்கு கூட குடிதண்ணீர்
பெருங்குடி சீவரம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக 2 நாட்களுக்கு ஒருமுறைதான் அரை மணி நேரம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதிக்கு விநியோகம் செய்பவர் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் ₹10 ஆயிரம் பெற்று கொண்டு வீட்டின் வாசலிலே குடிநீர் குழாய் அமைத்து கொடுத்து விடுகிறார். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் உள்ள தோட்டத்திற்கு குடிநீரை பயன்படுத்திகின்றனர். -பாஸ்கர், தனியார் நிறுவன ஊழியர், பெருங்குடி சீவரம்

ரேடியல் சாலையில் போக்குவரத்து நெரிசல்
பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் வரை செல்லும் ரேடியல் சாலை விரிவாக்கப்  பணியானது பல கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு 3  ஆண்டுகள் ஆகியும் நிறைவடையாமல் உள்ளது. மந்த கதியில் நடந்து வரும் பணியால் மாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. -ரதிதேவி, தனியார் நிறுவன ஊழியர், பல்லாவரம்

பஸ்சே வரல ஆபீசர்
தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐஓசியில் பேருந்து நிலையம் கட்டும் திட்டம் பல வருடங்களாக கிடப்பில் உள்ளது. மேலும் இங்கிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளும் குறைக்கப்பட்டு உள்ளது.  ஐஓசி பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் கோயம்பேடு வடபழனி உள்ளிட்ட பல இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது ஆனால் தற்போது பாரிமுனைக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. - கண்ணன், தச்சர், தண்டையார் பேட்டை



Tags : People's vision, weekly issues
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...