தலைவிரித்தாடும் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: தலைவிரித்தாடும் கடும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க வலியுறுத்தி சென்னையில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை: தமிழக தலைநகர் சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக தாய்மார்கள் குடங்களுடன் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலிக் குடங்களுடன் அலைகிறார்கள். சென்னையில் தண்ணீரின்றி பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி குழந்தைகளை, பள்ளிக்கூடங்களில் கழிவறைக்கு தண்ணீர் கொண்டுவர சொல்கிற அவலநிலை. இவ்வளவு துயரங்களுடன் மக்கள் உள்ள நிலையில், இதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு செயல்படுகிறது.

மக்களின் குடிநீர் தேவையை போக்கிட போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட, ஆளும் அதிமுக அரசை வலியுறுத்தும் வகையிலும்-குடிநீர் பஞ்சத்தை போக்கிட வலியுறுத்தும் வகையிலும் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், 24ம் தேதி (நாளை) காலை 9.30 மணியளவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலை வகிக்கின்றனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள்-பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள்- வட்ட நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள், தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : demonstration ,Chennai ,MK Stalin , Drinking water, drought, Chennai, tomorrow, protest, MK Stalin
× RELATED இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்