ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக வெயில் காலங்களில் அதிமுக சார்பில் திறக்கப்படும் தண்ணீர் பந்தல் இந்தாண்டு காணோம்

தண்ணீரே கிடைக்காதபோது பந்தல் எப்படி அமைப்பது என்கிறார்களாம் அமைச்சர்கள்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக வெயில் காலங்களில் அதிமுக சார்பில் திறக்கப்படும் தண்ணீர் பந்தல் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் கூறும்போது, ‘‘அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு சொந்த பிரச்னையை சமாளிக்கவே நேரம் இல்லாதபோது, மக்கள் பிரச்னை பற்றி என்ன கவலை?’’ என்று கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் அதிக வெயில் வாட்டி எடுக்கும். இதையொட்டி ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதும் சரி, அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும்போது சரி ஒவ்வொரு ஆண்டு மே மாதம் தொடங்கியதும், பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடுவார்.

இந்த உத்தரவை ஏற்று அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், அதிமுக எம்எல்ஏக்கள் போட்டி போட்டுக் கொண்டு தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பார்கள். அங்கு தினசரி, வாட்டர் கேன் வைத்து அல்லது மண்பானையில் தண்ணீர் வைத்து சாலைகளில் நடந்து வருபவர்கள் வெயில் தாங்காமல், வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கம். இந்த நடைமுறை கடந்த 2018ம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு (2019) அதிமுக சார்பில் இதுவரை தண்ணீர் பந்தல் எங்கும் திறக்கப்படவில்லை.
 
இதுகுறித்து அதிமுக தலைமையும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதம் மக்களவை தேர்தல் என்பதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்பட்டது.  ஆனால், தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகிறது.

இப்போதும், தினசரி 105 டிகிரிக்கும் அதிகமாக சென்னையில் வெயில் கொளுத்துகிறது. மக்கள் வீடுகளில் கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளனர். இதை பார்த்தாவது, ஆளும் அதிமுக அரசு தமிழகத்தில் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவிடும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல்வர் அல்லது துணை முதல்வரிடம் இருந்து எந்த உத்தரவும் வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை, தி.நகர் பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் சிலர் கூறியதாவது:
ஜெயலலிதா மறைந்த பிறகும் அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் மக்களுக்கு மட்டுமல்ல, அதிமுக தொண்டர்கள், 2ம் கட்ட நிர்வாகிகள் கூட எந்த பயனையும் அடையாமல்தான் இருக்கிறோம். அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்களுக்கு அவர்களது பிரச்னையே பெரிய பிரச்னையாக உள்ளது. அமைச்சர்கள் பதவியை தக்க வைக்க வேண்டும், கமிஷன் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். எம்எல்ஏக்களோ, ஆட்சிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று மிரட்டியே கட்சி தலைமையிடம் பணத்தை வாங்கி சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது மக்கள் பிரச்னை பற்றி யோசிக்க அவர்களுக்கு நேரம் எங்கு இருக்கிறது. சென்னை மக்கள் வீடுகளில் பயன்படுத்த கூட தண்ணீர் கிடைக்காமல் தவியாய் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஆனால், தற்போதுள்ள தலைமையிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. முக்கியமாக தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீரை பஞ்சத்தை சாக்காக வைத்து தண்ணீரையே காசாக்கும் தொழில் கொடிகட்டி பறக்கிறது.

இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள்தான் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் தண்ணீர் பந்தல் அமைத்தால் ஆளும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு அதிக செலவாகும். அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப தண்ணீர் வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியுமா அவ்வளவு சம்பாதிக்க பார்ப்பார்களா, மக்களுக்கு தண்ணீர் பந்தல் திறந்து இலவசமாக தண்ணீர் கொடுப்பார்களா? தற்போதுள்ள அதிமுக தலைமையிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றார்கள். இந்நிலையில், தண்ணீர் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில் தண்ணீர் பந்தலை அமைப்பது எப்படி என அமைச்சர்கள் கூறுகின்றனராம்.

Tags : AIADMK , Every year, we see the sun, water, this year
× RELATED கொடைக்கானல் மேல் கிளாவரையில்...