×

வறட்சி, நிலத்தடிநீர் குறைவால் எதையும் செய்ய முடியல...தொழிலை கைவிட்டு துள்ளி ஓடும் முயல் வளர்ப்பு விவசாயிகள்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், முயல் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்ட விவசாயிகளும் கடும் வறட்சியால், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தற்போது அத்தொழிலையும் கைவிட்டு முயலைவிட வேகமாக விவசாயிகள் துள்ளி ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு விளங்கி வருகிறது. சாப்பிடுற உணவை, கறியா மாத்துற திறனும், இன விருத்தியும், மற்ற விலங்குகளைவிட முயலுக்கு அதிகம். முயலை நம் வசதியைப் பொருத்து, எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். முயல் கறி, சாப்பிட்ட உடனே ஜீரணமாகி விடும். இந்தக் கறியில் குறைவான கொழுப்பு, அதிக புரதம், குறைவான கலோரிதான் உள்ளது.

முயல் கறி மிருதுவாக, சுவையாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு முயல் இல்லை. எந்தப் புதுப்பொருளாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டு ருசி கண்டால்தான் அடுத்தடுத்து சாப்பிடத் தோன்றும். நம் ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி கிடைக்கிற அளவுக்கு முயல் கறி கிடைப்பதில்லை. அதனால் மக்கள் வாங்கி சாப்பிடுவதில்லை.வளர்ப்புக்கு, இனப்பெருக்கத்துக்கு, சோதனைக் கூடங்களுக்கு, இறைச்சிக்கு என பலவகையிலும் முயல்கள் தேவை உள்ளது. இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல விவசாயிகள் முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன்மூலம் வருமானமும் ஈட்டி வந்தனர். முயலுக்கு அருகம்புல், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

முயல்கள் பகல்வேளையில், அதிக வெப்பநிலை காரணமாக தீவனம் சாப்பிடாமல் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும். அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும். சுத்தமான சுகாதாரமான குடிநீர் முயல்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில், கடும் வறட்சியினால் முயலுக்கு தேவையான அருகம்புல், அகத்தி, மல்பெரி இலைகள் ஆகிய பசுந்தீவனங்களை வளர்க்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. வெப்ப நிலையும் தினம்தோறும் அதிகரித்து வருவதால், அதை தாங்கும் சக்தி முயல்களுக்கு இல்லை.

இதனால், சோர்வாகவும், தளர்ச்சியுடனும் மெலிந்து, எலும்பும், தோலுமாக மாறியது. அங்கும் இங்கும் திரியாமல் ஒரே இடத்தில் அடைந்து காணப்படும் முயல்களின் எடை அளவும் குறைவானது. கோடை வெயில் அதிகரிப்பால் கூண்டுகள் மற்றும் கொட்டகையின் வெப்பம் அதிகரித்து முயல்கள் இறக்க நேரிட்டது. இதனால், முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், தற்போது அத்தொழிலையும் கைவிட்டு, முயலை விட வேகமாக துள்ளி ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

முயல் இறைச்சியின் சிறப்புகள்
100 கிராம் முயல் இறைச்சியில் 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து, 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன. ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய் உள்ளவர்களும் தாராளமாக முயல் இறைச்சியை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முயல் இறைச்சி நல்ல தரமான, எளிதில் செரிக்கவல்ல புரதச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

Tags : Drought , Drought, groundwater, rabbit farming, farmers
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!