×

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருகிய கரும்புடன் நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் புகார் 22 கோடியுடன் கடந்தாண்டு 19 கோடி நிலுவை தொகை

சென்னை: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய தொகை 22 கோடி ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், கடந்தாண்டு மேலும் ₹ 19 கோடி நிலுவை வைத்துள்ளதால், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், 12,500 விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டு 1,000 ஏக்கர் கரும்பு கருகியது. கருகிய கரும்புடன் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டரை விவசாயிகள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.‘’காடு வௌஞ்சென்ன மச்சான்... நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்...’’ என பலரும் விவசாயத்தை விட்டு ஓடிவிட, இன்றும் நம்பிக்கையோடு விளை நிலங்களில் பாடுபடும் கரும்பு விவசாயிகளின் ஆதங்க குரல்தான் இது.

கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை யாருக்கு விற்க வேண்டும். என்ன விலைக்கு விற்க வேண்டும் என்ற உரிமைகூட அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது. 1966ம் ஆண்டைய மத்திய அரசின் ஆணைப்படி, கரும்பு பயிரிடும் விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு மட்டுமே கரும்பை விற்க முடியும். அதோடு, என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதையும், மத்திய, மாநில அரசுகளே நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை அரவைக்காக விவசாயிகள் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த ஆலையில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு பெற்று அரவை செய்யப்படுகிறது. ஒரு டன் கரும்புக்கு, மத்திய அரசு 2,550, மாநில அரசு 450 என மொத்தம் 3,000 வழங்கப்பட வேண்டும். இதில், கரும்பு ஏற்றி வரும் வாகனங்களுக்கு 100 பிடித்தம் போக, ஒரு டன்னுக்கு 2,900 வீதம் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். ஆனால், கரும்பு வெட்டி அனுப்பிய வகையில், ஆலை நிர்வாகம் கடந்த 2013-14ம் ஆண்டு வரை மட்டுமே விவசாயிகளுக்கு பணம் வழங்கியுள்ளது. அதன் பின்னர் 2017 வரை 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் கரும்பு அனுப்பிய வகையில் 22 கோடி நிலுவையில் வைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2018-19ம் ஆண்டு 2,59,000 டன் கரும்பினை விவசாயிகளிடம் கொள்முதல் செய்தது. இதற்கான 67.68 கோடியில், இதுவரை 48.53 கோடி பணம் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள 19.15 கோடி பணம் நிலுவையில் உள்ளது. மேலும், நடப்பாண்டு கடும் வறட்சியினால் திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில், நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்ததால் 1,000 ஏக்கருக்கு மேல் கரும்புகள் கருகியது.  இதில், மனமுடைந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்துக்கு கருகிய கரும்புகளுடன் வந்தனர்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டரை கருகிய கரும்புகளுடன் சூழ்ந்து, திருவள்ளூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என புகார் தெரிவித்தனர். இதனை அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை தொடர்ந்து அவர்கள் இருக்கையில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வருமானம் இருந்தும் காலம் தாழ்த்துவதால் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்தது
கரும்பு விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘’ஒரு டன் கரும்பில் இருந்து, 95 கிலோ சர்க்கரை, 10 லிட்டர் ஸ்பிரிட், ஆலைக்குச் செலவானது போக 100 யூனிட் உபரி மின்சாரம் என 3,200க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவு லாபம் கிடைக்கும்போது, டன்னுக்கு 2,900 கொடுப்பதில் அரசாங்கத்துக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. இப்படிக் காலம் தாழ்த்திக் கொண்டே போனால், கரும்பு சாகுபடியைக் கை விடுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கரும்பு பயிரிட்டு ஆலை நிர்வாகத்திற்கு வெட்டி அனுப்பிவிட்டு, உரிய தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த கரும்பு விவசாயிகள் கடந்தாண்டு முதல் கரும்பு பயிரிடுவதை தவிர்த்து, மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்தாண்டு மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு 5,000 ஹெக்டேரில் இருந்து 3,500 ஹெக்டேராக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு மேலும் குறையும் என்ற நிலை உருவாகியுள்ளது.

கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவிப்பு
கரும்பு விவசாயிகள் கூறுகையில், ‘’திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்டு 12,500 விவசாயிகள் கரும்பு பயிரிட்டு உள்ளனர். ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட்டு அறுவடை செய்ய 12 மாதங்களாகிறது.  இதற்கு உர செலவு, பராமரிப்பு செலவு, கரும்பு வெட்டு கூலி ஆட்களுக்கான செலவு என அனைத்து செலவுகளையும் சேர்த்து, ஒரு ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை விவசாயிகளால் செலவு செய்யப்படுகிறது.  ஒரு ஏக்கரில் சராசரியாக 30 டன் கரும்பு உற்பத்தியாகிறது. தற்போது ஒரு டன் கரும்புக்கு,3,000 என அரசு அறிவித்துள்ளது. இதில், போக்குவரத்து வாடகை, இதர செலவு என பிடித்தம் செய்யப்பட்டு, 2,550 தான் வழங்கப்படும். இதன் மூலம், 30 டன்னுக்கு 76,500 வருமானம் கிடைக்கும்.

ஓராண்டு கஷ்டப்பட்டு வியர்வை சிந்தும் விவசாயிக்கு செலவு போக கிடைப்பது வெறும் 6,500 மட்டும் தான். காலம் தாழ்த்தி வெட்டினால், கரும்பின் எடை குறைந்து, இதற்கும் குறைவான வருமானம் தான் கிடைக்கும். சமயத்தில் நஷ்டமும் ஏற்படும். ஏற்கனவே ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கான தொகை 22 கோடி நிலுவையில் உள்ளது. அதையே இதுவரை மாநில அரசு வழங்கவில்லை.  இந்நிலையில், 2018-19ம் ஆண்டும் ₹19 கோடி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு வறட்சியால் பயிரிட்ட கரும்புகள் கருகியது. இதனால், கடன் வாங்கி, கூலி கொடுத்துள்ளதோடு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் திணறி வருகிறோம்’’ என்றனர்.

கரும்பு விவசாயிகள் பெற்ற பயிர்கடனை, ஆலைகள் செலுத்தாத காரணத்தால், அடுத்ததாய் பயிர்கடன், நகைக்கடன், கல்விக்கடன் என எந்த கடனையும் பெற முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கரும்பு கொள்முதலுக்கான விலையை ஆலையிடம் இருந்து பெற முடியாதது ஒருபுறம், வங்கிகடன் நிலுவையால், புதிய கடன் பெற முடியாதது மறுபுறம் என கரும்பு விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.



Tags : Cooperative Sugar Factory , Peoria Cooperative Sugar Plant, Amount
× RELATED தமிழகம் முழுவதும் 35 டிஆர்ஓக்கள் பணியிட மாற்றம்