×

ரூ.77 லட்சம் செலவில் சென்னையில் 57ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: 80 நாட்களில் செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் 57,366 தெருநாய்களுக்கு ரூ.77 லட்சம் செலவில் ரேபிஸ் தடுப்பூசி (வெறி நாய்கடி தடுப்பூசி) போடும் திட்டத்தை வரும் ஜூலை முதல் செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அனைத்து தெருக்களிலும் நாய்கள் அதிகமாக உலவுகின்றன. நோய் பாதித்த நாய்களும் அதிகம் உள்ளன.

இந்த நாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி வேன்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ளன. ஆனால், இந்த வேன்களைப் பார்த்தவுடனே தெருநாய்கள் ஓட்டம் பிடிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், வெறி நாய்களும் பல இடங்களில் நடமாடுகின்றன. இந்த நாய்கள் கடித்தால் உயிருக்கு ஆபத்து.
கடந்த ஆண்டு எடுத்த கணக்கின்படி சென்னையில் மொத்தம் 57,366 தெருநாய்கள் உள்ளன. மண்டல வாரியாக பார்த்தால் அம்பத்தூர் மண்டலத்தில் 7,383 நாய்கள் உள்ளன.

மிகக்குறைந்த எண்ணிக்கையில் தெருநாய்கள் உள்ள மண்டலம் மணலியாகும். இங்கு 2,044 தெருநாய்கள் மட்டுமே உள்ளன. இந்த தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்கவும், வெறி நாய்கடித்தால் விஷம் ஏறாத வகையில் நாய்களின் உடம்பில் ரேபிஸ் தடுப்பூசி மருந்தை செலுத்தவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த வரிசையில் சென்னையில் உள்ள 57,366 தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை ஜூலை முதல் செயல்படுத்த மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. இதற்காக ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கால்நடை மருத்துவ உதவியாளர்கள், நாய் பிடிப்பவர்கள், உதவியாளர்கள், நாய் வண்டி ஓட்டுபவர்கள் இடம்பெறுவார்கள்.

இவர்கள் தெருநாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போடுவார்கள். தடுப்பூசி போடப்பட்ட நாய்க்கு அடையாள மை வைக்கப்படும். 7 குழுக்களும் ஒரு நாளைக்கு 1000 நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் மாநகராட்சி பணியாளர் அல்லாத வெளியாட்களும் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தை 80 நாட்களில் செய்து முடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ரேபிஸ் தடுப்பூசி மட்டுமல்லாமல் தெருநாய்களின் பெருக்கத்தை குறைக்க அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஊசி போடும் திட்டமும் செயல்படுத்தப்படும். தற்போது நாள் ஒன்றுக்கு 60 நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஊசி போடப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் சென்னையில் தெருநாய்களின் தொந்தரவு குறையும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : street vendors ,Chennai , 77 lakh, Chennai, 57 thousand, street dog, rabies vaccine, corporation action
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...