×

மேடவாக்கம், பல்லாவரம், வேளச்சேரி, கீழ்கட்டளை மேம்பால பணிகளை விரைவாக முடியுங்கள்: துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: மேடவாக்கம், பல்லாவரம், வேளச்சேரி, கீழ்கட்டளை பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.

இதில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் 7 நெடுஞ்சாலைகள் துறை தலைமை பொறியாளர்கள், 40 கண்காணிப்பு பொறியாளர்கள், 130 கோட்ட பொறியாளர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார். இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை நேரடியாக முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்பட்டது. மேலும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் 200 நெடுஞ்சாலை துறை பொறியாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, தமிழகம் முழுவதும் நடந்து வரும் சாலை மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். குறிப்பாக, தரமான சாலைகளை அமைக்க வேண்டும், என்னுடைய (முதல்வர்) நேரடி பார்வையில் இந்த துறை வருவதால் மற்ற துறைகளை விட சிறப்பாக நடைபெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். இதை அதிகாரிகள் சரிவர செய்து முடிக்க வேண்டும்.

முக்கியமாக, புதிதாக சாலை அல்லது பாலம் அமைக்கும்போது சரியாக எவ்வளவு செலவாகும் (எஸ்டிமேட்) என்பதை துல்லியமாக கணிக்க வேண்டும். சமீபத்தில் சேலத்தில் நடந்து முடிந்த பாலத்தின் மதிப்பு ரூ.300 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த பணிகள் முடியும்போது ரூ.400 வரை செலவாகி விட்டது. அதனால் அரசுக்கு ரூ.100 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. அதேபோன்று காலதாமதமாக பணிகளை செய்து முடிப்பதாலும் கூடுதல் பணம் விரயம் ஆகும். அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை இருந்தால் என்னிடம் அல்லது எனது உதவியாளர்களிடம், துறை செயலாளரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் இதுபற்றி கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துறையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தும் உடனடி தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உதவி பொறியாளர் பணிகள் காலியாக இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி.யிடம் எழுதி கொடுத்தால் தேர்வுகள் நடத்தி பணிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக, சென்னையில் மேடவாக்கம், பல்லாவரம், வேளச்சேரி, கீழ்கட்டளை பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைவாக செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நடவடிக்கை வேண்டும். மேடவாக்கம், பல்லாவரம் மேம்பாலத்தை வரும் டிசம்பர் மாதத்திற்குள்ளும், வேளச்சேரி, கீழ்கட்டளை மேம்பாலத்தை 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கண்டிப்பாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

3 தலைமை பொறியாளர் பணியிடத்தை நிரப்புங்கள்:
தமிழகத்தில் ரூ.1000 கோடிக்கும் மேல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் பணிகள் நடந்து வருகிறது. சாலை, மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலை, உலக வங்கி நிதியை பெற்று பணிகளை கவனிப்பது என தமிழகத்தில் மட்டும் 10 தலைமை பொறியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது தலைமை பொறியாளர் (திட்டங்கள்), ஆசிய வங்கி வளர்ச்சி நிதியில் இருந்து செயல்படும் சென்னை-கன்னியாகுமரி (சாலை திட்டம்), உலக வங்கி நிதியில் செயல்படும் தமிழ்நாடு மேம்பாட்டு திட்டம் ஆகிய 3 தலைமை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த மூன்று பணியிடங்களையும் மற்ற தலைமை பொறியாளர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்கள். இதனால், அந்த துறைகளில் பணிகள் காலதாமதம் ஆவதாக கூட்டத்தில் முதல்வரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களை நிரப்பினால் அனைத்து துறையிலும் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் பொறியாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். அதேபோன்று, தற்போது காலியாக உள்ள 123 உதவி பொறியாளர் பணியிடங்களையும் நிரப்ப முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Medavakkam ,Pallavaram ,Velachery , Medavakkam, Pallavaram, Velachery, Lower Divisional Secretariat, Department Officer, Chief Minister
× RELATED 2 வயது பெண் குழந்தை குளத்தில் மூழ்கி பலி