×

காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 219.52 கோடி செலவில் 43 துணை மின் நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 219.52 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 43 துணை மின் நிலையங்கள் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம் அத்தாணியில் 8 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
மேலும், மதுரை, திருவள்ளுர், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி,  வேலூர் ஆகிய மாவட்டங்களில் 219 கோடியே 52 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 43 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தி துறை செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் விக்ரம் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை, திருச்சியில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம்
மதுரை, திருச்சியில் அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அரசு துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்திடும் வகையில் 1 கோடியே 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள், வாகனங்கள் குறித்தான உரிய செய்முறை விளக்க உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் வகுப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்பு துறை இயக்குநர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : power plants ,districts ,Thiruvallur ,Kanchipuram , Kanchipuram, Tiruvallur, Districts, Edapady
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...