×

மாற்றுத் திறனாளியாக பிறந்ததால் விரக்தி 2 வயது மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: போரூரில் சோகம்

பூந்தமல்லி: போரூர் அருகே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகனை கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. போரூர் அடுத்த தெள்ளியார் அகரம் தெருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (37), பெயின்டர். இவரது மனைவி அஸ்வினி (28). இவர்களது மகன்கள் பிரதீப் (4), சக்திவேல் (2). மூத்த மகன் பிரதீப்புக்கு, வாய்பேச இயலாது, காதும் கேட்காது. அதனால், சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பேச்சு தெரபி பயிற்சி அளித்து வந்தனர். இதற்காக பெற்றோர் ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இளைய மகனான சக்திவேலை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவனுக்கும் வாய்பேச இயலவில்லை, காதும் கேட்கவில்லை என்பது தெரிந்தது. அவற்றை நிவர்த்தி செய்ய முடியாது என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது 2 மகன்களும் வாய்பேச இயலவில்லை, காதும் கேட்கவில்லையே என்ற மன உளைச்சலில் அஸ்வினி இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மூத்த மகன் பிரதீப்பை, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வரும்படி கணவரிடம் அஸ்வினி கூறியுள்ளார். அதன்படி அவரும், மகனை அழைத்து சென்று பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பினார். அங்கு, அஸ்வினி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். மற்றொரு அறைக்குச் சென்று பார்த்தபோது கட்டிலில் இளைய மகன் சக்திவேலும் இறந்து கிடந்தான்.

தகவலறிந்து போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாய், மகன் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஸ்வினிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Alternate, born, 2-year-old son, killed, mother thrown, suicide
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...