×

குளம், கண்மாய் உண்டு; கால்வாய் இல்லை பிறகு எப்படி மழை நீரை சேமிக்க முடியும்? ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க வேண்டும்

சென்னை: சென்னை உட்பட முக்கிய நகரங்களில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் வறண்டு விடும் என்று நிதி ஆயோக் எச்சரித்துள்ள நிலையில், நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம் கண்மாய்களில் மழைநீரை சேகரித்தால் மட்டுமே, தண்ணீர் பிரச்னையில் இருந்து தப்பிக்கும் வழி ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பொதுப்பணித் துறையின்கீழ் 39,202 குளங்கள் உள்ளன. இதுதவிர ஏராளமான குளங்கள், கண்மாய்கள் உள்ளன. தமிழகத்தின் நீர் ஆதாரமே மழை வளம்தான். அதனால், மழைநீர் சேமிப்பு ஒன்றே வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். ஆனால், தமிழகத்தின் நீர் நிலைகளைக் காப்பதில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியது இருக்கிறது. அந்த திசையில் பயணம் செய்ய ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

குளங்கள், கண்மாய்களில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்ததைத் தொடர்ந்து நீர் நிலைகளை தூர்வாரும் பணி அவ்வப்போது நடந்தது. பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஆனால், மழை பெய்தவுடன் வழிந்தோடும் நீர் செல்லும் கால்வாய்கள்தான் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டன. இந்த நிலை தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. நீர் செல்லும் வழித்தடங்கள் இல்லை என்றால் எப்படி குளங்கள், கண்மாய்கள் தண்ணீரால் நிரம்பும்? மழை முடிந்தவுடன் தண்ணீர்் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும். இப்படித்தான் சென்னை உள்பட பல நகரங்களில் கோயில் குளங்கள் காட்சியளிக்கின்றன.

இதற்காகத்தான் கடந்த 2007ம் ஆண்டு தமிழ்நாடு கண்மாய் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டம் கொண்டு வரப்பட்டது. கண்மாய்களில்
ஆக்கிரமிப்புகளை தடுத்தல், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கண்மாய்களை பாதுகாத்தல், நீர் வழித்தடங்களில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாத்தல் ஆகியவை இந்த சட்டத்தின் பிரதான நோக்கம்.  கண்மாய் நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்தாலோ அல்லது கண்மாய் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளை சேதப்படுத்தினாலோ இந்தச் சட்டத்தின் 7, 8வது பிரிவுகளின்படி 3 மாத சிறை தண்டனை அல்லது ரூபாய் 5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிதி ஆயோக் கூறியபடி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் நீரின்றி பாலைவனமாக மாறிவிடும். அதற்கு முன்னதாக அரசும், மக்களும் சுதாரிக்க வேண்டியது அவசியம்.

மகாராஷ்டிராவில்...
மகாராஷ்டிராவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய பகுதியில் சுமார் 5,000 கிராமங்களை ஒருங்கிணைத்து மழைநீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை (ஜல்யுகத் ஷிவார்) கடந்த 2015-16ல் முதல் கட்டமாக அப்போதைய மாநில அரசு அமல்படுத்தியது. அடுத்த 5 ஆண்டுகளில் இப்பகுதியை தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதியாக மாற்றுவதே இதன் பிரதான நோக்கம். இதன் பின்னர் புனே பிராந்தியத்தில் 5 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான மாவட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.

* நீர் நிலைகளில் மழைநீரை சேமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தூர்வாரப்பட்ட குளங்கள், கண்மாய்களில் நீரை நிரப்ப உதவும் காய்வாய்களை ஓடைகளை ஆக்கிமிரப்பு செய்யப்பட்டிருந்தால் அதுபற்றிய விவரங்களை பொதுமக்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உள்ளாட்சி அமைப்பு நிர்வாக கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் நிலைகள் தண்ணீரை சேமிக்கலாம். வறண்ட கோடைக்காலத்தில் தட்டுப்பாடின்றி தண்ணீர் பெறலாம். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காலத்திற்கு கை கொடுக்கும். மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியம்.

சட்டத்தின்படி...
* ஏரிப் பகுதிகளில் அதிகாரமின்றி யாரும் நுழையக்கூடாது. ஏரிப் பகுதிகளில் மரங்களை நடக்கூடாது. பயிர் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
* ஏரிக்கரையில் மதகுகளை, வயல்வாய்க்கால்களை மற்றும் கட்டப்பட்டுள்ள கட்டமைப்புகளை சேதப்படுத்தக் கூடாது.
* வழங்கு வாய்க்கால்களில் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது.
* நீரோட்டங்களை சேதப்படுத்தவோ, தடுக்கவோ கூடாது.




Tags : pond ,I Save Rain Water ,Canal , Pool, dank tarn, canal, Water
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்