×

கடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்: திட்டங்களை தீட்ட வேண்டிய அமைச்சர்களோ மழைவேண்டி யாகம்

சென்னை: தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதேநேரத்தில் திட்டங்களை தீட்டி, தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டிய அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் நேற்று யாகம் நடத்தினர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் உருவாகியுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், பள்ளிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் மூடப்பட்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு பலர் சென்றுள்ளனர்.

குடிசை பகுதிகளிலும் தண்ணீருக்காக விடிய விடிய காத்திருக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. அதேநிலைதான் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு முறையாக திட்டமிடாமல், செயல்பட்டதால்தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், முறையாக தண்ணீர் விநியோகம் செய்யக்கோரி பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தி வருகின்றனர். காலி குடங்களுடன் குடிநீர் வாரிய அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக வதந்தி கிளப்பி வருகின்றனர் என்று உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் தமிழகத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்க 2 எம்எல்டி தண்ணீர் தருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். ஆனால் அந்த தண்ணீர் தங்களுக்கு வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல மாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் தர முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தினமும் 35 கோடி லிட்டர் தண்ணீர் ேதவைப்படும் நிலையில் 1 கோடி லிட்டருக்கு மட்டும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக நீர் மேலாண்மை வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தண்ணீர் பிரச்னையை தீர்க்காத எடப்பாடி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களை திரட்டி திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வட்ட, பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலி குடங்களுடன் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, எம்எல்ஏ ரங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவள்ளூரில் திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தி.நகர் பகுதியில் சேப்பாக்கம் திருவல்லிக்ேகணி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் தலைமையிலும், தென் சென்னை பகுதிகுக்கு உட்பட்ட ஜாபர்கான் பேட்டை பகுதியில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலும், விழுப்புரத்தில் பொன்முடி தலைமையிலும், கடலூரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் கே.என்.நேரு தலைமையிலும், சேலத்தில் வீரபாண்டி ராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அமைச்சர்கள் யாகம்: இதற்கிடையே, அனைத்து  மாவட்டங்களிலும் அமைச்சர்கள், கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த  வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்  ஆகியோர் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து சேலத்தில் காசிவிஸ்வநாதர் ேகாயிலில் மாநகர் மாவட்ட செயலாளர்  வெங்கடாஜலம் எம்எல்ஏ தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. நாமக்கல்லில்  மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் யாகம் நடந்தது.  தர்மபுரி குமாரசாமிப்பேட்டை முருகன் ேகாயிலில் அமைச்சர்  அன்பழகன் தலைமையில் யாகம் நடந்தது. கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி முருகன்  கோயிலில் நடந்த யாகத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமை  வகித்தார்.

திருச்சி உறையூர் கோயிலில் நடந்த யாகத்தில் அமைச்சர்கள்  வெல்லமண்டி நடராஜன், வளர்மதி பங்கேற்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்  நடந்த யாகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.  இதேபோல தமிழகம் முழுவதும்  அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாகம் நடத்தினர். திட்டங்களை தீட்டி,  தண்ணீர் பிரச்னையை போக்க வேண்டிய அமைச்சர்கள், அதை விட்டுவிட்டு கோயல்களில்  சிறப்பு யாகங்களை நடத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வட்ட, பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலி குடங்களுடன் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* மழை வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாகம் நடத்தினர். திட்டங்களை தீட்டி, தண்ணீர் பிரச்னையை போக்க வேண்டிய அமைச்சர்கள், அதை விட்டுவிட்டு கோயில்களில் சிறப்பு யாகங்களை நடத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Tags : protests ,DMK ,state ,government ,Tamil Nadu , Water Famine, Tamil Nadu Government, DMK, Demonstration
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...