×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன மரங்களில் தத்ரூபமாக வடிவமைக்கப்படும் அழகிய சிற்பங்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுபோன மரங்களை அழகிய சிற்பங்களாக மாற்றி அந்த சாலையே பொதுமக்களை கவரும் வகையில் மாற்றப்பட்டு வருகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலபம் வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று லட்சக்கணக்காண பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள், ரமணாஸ்ரமம், விசிறி சாமியார் ஆஸ்ரமம் என ஆசிரமங்கள், மடங்கள் அமைந்துள்ளன.

இத்தகைய சிறப்புகள் மிக்க 14 கி.மீ தூரமுள்ள கிரிவலப்பாதையின் இருபுறமும் பல வகையான 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இதில் சில மரங்கள் காய்ந்து, பட்டுப்போன நிலையில் காட்சி அளித்து வந்தன. இதனால் பட்டுப்போன நிலையில் உள்ள மரங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் சந்தேகம் எழுந்தது.அதைத்தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேளாண் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் மற்றும் வனத்துறையினர் கிரிவலப்பாதையில் பட்டுபோன மரங்களை ஆய்வு செய்தனர். இத்தகைய ஆய்வில், தண்டு துளைப்பான் பூச்சி இனத்தை சேர்ந்த வண்டுகள் தாக்குதலால்தான் மரங்கள் பட்டுப்போனதாக கண்டறியப்பட்டது.

அதைத்ெதாடர்ந்து ேமலும் உள்ள மரங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டு வரும் மரங்களை காப்பாற்றும் நடவடிக்கையாக தண்டு துளைப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த தார் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து மரங்களில் பூசுதல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மரத்தில் துளையிட்டு செலுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.அதேநேரத்தில் கிரிலப்பாதையில் பட்டுபோன மரங்கள் அகற்றப்படாமல், கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது மட்டுமின்றி, நெருடலாகவும் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை கிரிவலப்பாதையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பட்டுபோன மரங்களை வெட்டி அகற்றாமல், அந்த மரங்களுக்கு கலை சிற்பங்கள் மூலம் உயிர்கொடுக்கவும், கிரிவலப்பாதையை அழகான பாதையாக மாற்றவும் முடிவு செய்தார். இதற்காக ₹6 லட்சம் சிறப்பு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், கிரிவலப்பாதையில் பட்டுப்போன 62 மரங்களில் சிற்பம் வடிவமைக்க தரமான நிலையில் உள்ள 30 மரங்களில் மரச்சிற்பங்களை வடிவமைக்கும் பணியினை தொடங்க மகாபலிபுரத்தை சேர்ந்த மர சிற்பம் செய்யும் மதுரை மணிகண்டராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார். முதலில் அவர் பட்டுப்போன மரங்களில் சிற்பங்கள் வடிக்க தகுதியான மரங்களை தேர்வு செய்தார். தொடர்ந்து அந்த மரங்களை பல்வேறு வித சிற்பங்களை கொண்டதாக மாற்றும் பணியை கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவின் போது தொடங்கினார்.

மரச் சிற்பம் செய்யும்(ஸ்தபதி) மூலம் அந்தந்த மரங்களுக்கு தகுந்தாற்போல் பட்டுப்பான மரங்கள் உருமாறி வருகின்றன. அதன்படி, பறவைகள், முயல், மயில், முதலை, பட்டாம் பூச்சி, குதிரை, வாட்ச், செல்போன், டால்பின், இந்திய வரைபடம், இறகுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவங்களை வடிவமைத்து வருகின்றனர். இத்தகைய சிற்பங்கள் கிரிவலப்பாதையில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அழகிய சிற்பங்களை கண்டு பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் மர சிற்பங்களின் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து சிற்பி மதுரை மணிகண்டராஜ் கூறியதாவது: நானும் எனது குழுவினரும் மரச்சிற்பங்களை வடித்து வருகிறோம். எங்கள் மரச்சிற்பங்கள் தொகுப்பு கண்காட்சியாகவும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி குறித்தும், எங்கள் மரச்சிற்பங்கள் குறித்து அறிந்த திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, தற்போது, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன மரங்களை அகற்றாமல் அதில் உயிரோட்டமான மரச்சிற்பங்களை வடிவமைக்க ஆர்வம் கொண்டுள்ளார். அதனடிப்படையில், கிரிவலப்பாதையில் பட்டுப்போன நிலையில் இருந்த மரங்களில் சிற்பம் செய்வதற்கு உகந்ததாக 30 மரங்கள் தேர்வு செய்யப்பட்டன.இதில் பல வகையான பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக மாவட்ட நிர்வாகம் பல லட்சம் செலவு செய்துள்ளது. தீபத்திருவிழாவிற்காக முதல்கட்டமாக அரசுக்கலைக்கல்லூரி அருகே உள்ள பட்டுபோன மரத்தில் மரச் சிற்பம் செய்யும் பணி தொடங்கினோம்.

அதனை தொடர்ந்து, மீதமுள்ள மரங்களுக்கு சிற்பங்கள் மூலம் உயிர்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சில நாட்களில் இப்பணிகளை முடிக்க உள்ளோம். இது போன்று பட்டுபோன மரங்களில் சிற்பம் செதுக்குவது வெளிநாடுகளில்தான் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். தற்போது திருவண்ணாமலையில் கலெக்டர் ஆர்வம் கொண்டு இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

மேலை நாடுகளில் சாலையோரமரச்சிற்பங்கள்:
ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவின் கொலராடோ உட்பட வடஅமெரிக்க, தென்அமெரிக்க நாடுகளிலும் சாலையோர மரங்களில் பட்டுப்போகும் நிலையில் உள்ள மரங்களை சிற்பங்களாகவும், சாலையோர இருக்கைகளாகவும் மாற்றியுள்ளனர். இதன் மூலம் மரங்களை பட்டுப்போனாலும் உயிர்ப்புடன் பயன்பாட்டில் வைத்திருக்கும் நடைமுறையையே திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கலெக்டர் கந்தசாமி மேற்கொண்டுள்ளார். இம்முயற்சியை தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளிலும் அரசு தொடர வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Tags : Thiruvannamalai , Beautiful sculptures , Thiruvannamalai
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...