×

பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியாவில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் அவலம்: ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்

வேலூர்:  இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம், மனித உரிமைகள் ஆணைய கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கடத்தப்படுபவர்களில் 11 ஆயிரம் குழந்தைகள் வரை மீட்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகமாக உள்ளது.  அதன்படி, இந்தியாவில் ஆண்டுக்கு 11 ஆயிரம் குழந்தைகள் வரை மாயமாகி வருகின்றனர். இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் வெளிநாடுகள், 90 சதவீதம் பேர் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுவதாக மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்தப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும், 20 சதவீதம் பேர் பிக்பாக்கெட் அடிப்பது உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்களை தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கடத்தப்பட்ட 1.10 லட்சம் குழந்தைகளுக்கு மேல் மீட்கப்படாமல் இருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன? என்பதுதான் கேள்விக்குறி. இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பஸ், ரயில் நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குழந்தைகளுடன் சிலர் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதுபோன்று பிச்சை எடுப்பவர்கள் வைத்திருக்கும் குழந்தை அவர்களுடையதுதானா? என்பதே சந்தேகம். ஆனாலும், வெயிலில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறார்களே என்று முடிந்தவரை பணம் கொடுக்கிறோம். இதுபோன்ற அனுதாபத்தை தேடிக் கொள்ளவே குழந்தைகளை கடத்தி வந்திருக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. காரணம், ஒரே கும்பலை சேர்ந்த பெண்கள் ஆளுக்கொரு குழந்தையை வைத்துக் கொண்டு கூட்டமாக சுற்றுகின்றனர். அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியோ? யாருடைய குழந்தை என்பது குறித்த பூர்வீகம் பற்றியோ? யாரும் கண்டுகொள்வதில்லை.

இதுபோன்று குழந்தைகளை தூக்கிக் கொண்டு திரிபவர்களை பிடித்து விசாரித்தால், கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சிக்குவார்கள். ஆனால், போலீசார் யாரும் இதை கண்டுகொள்வதில்லை. அதேபோல், குழந்தைகள் நல அதிகாரிகள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவினர் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இவ்விஷயத்தில் அலட்சியப்போக்கையே கடைபிடித்து வருகின்றனர். குழந்தைகளுடன் பிச்சை எடுப்பவர்களிடம் விசாரணை நடத்தினால், கடத்தப்பட்ட மேலும் சில குழந்தைகள் மீட்கப்படலாம். அதேபோல், குழந்தை கடத்தல் கும்பலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. அதேபோல், வெளிநாட்டினர் சுற்றுலாவிற்காக நமது நாட்டிற்கு வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் நமது நாட்டில் குழந்தைகளுடன் ஆங்காங்கே பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது நமது நாட்டின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆண்டுக்கு 12.80 கோடி ஊழல்
குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பிச்சை எடுப்பவர்களில் வயதானவர்களை மீட்டு முதியோர் காப்பகங்களில் சேர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் ஒரு சிலர் காப்பகங்களுக்கு வர மறுத்துவிடுகின்றனர். பிச்சை எடுப்பதற்கு குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் குழந்தைகள் நலத்துறைக்கு உள்ளது. ஆனாலும் பிச்சை எடுப்பவர்களை மீட்க சமூக நலத்துறை மற்றும் போலீசார் இணைந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்றனர். சமூக நலத்துறை அதிகாரிகள் இதுபோன்று பதிலளித்துள்ள நிலையில், தமிழகத்தில் மாவட்டந்தோறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம் செயல்படுகிறது.

பிச்சை எடுப்பவர்களை போலீசார் உதவியுடன் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி இந்த மையத்தில் தங்க வைக்க வேண்டியது சமூக நலத்துறை அதிகாரிகளின் கடமை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையங்களில் தங்குபவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆண்டுக்கு 12.80 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பிச்சைக்காரர்கள் ஒருவர் கூட பொருளாதாரத்தில் முன்னேறவில்லை. இதனால், ஒதுக்கப்பட்ட நிதியை அதிகாரிகள் சுருட்டிக் கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

போலீஸ்  ஒத்துழைப்பு இல்லை
இதுதொடர்பாக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சொந்த குழந்தைகளை கொடுமை செய்பவர்களையும் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி, குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க முடியும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை போலீசார் விசாரிக்கும்போது, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான விவகாரங்களில் போலீசாரே வழக்குகளை விசாரித்து சமரசம் செய்து அனுப்பி விடுகின்றனர். மேலும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை பிடித்து வழக்கு போடுவதற்கு போலீசார் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. எனவே, குழந்தைகளை கடத்திச் சென்று பிச்சை எடுக்கும் விவகாரத்தில் தனியாக வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்’ என்றனர்.


Tags : India ,children , Economist, India, Child Trafficking
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...