×

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க வேணும்!: பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம்

புதுடெல்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயதை நீட்டிப்பதுடன், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யக் கோரி, பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதி உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்  கோகாய், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள 2 கடிதத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நீதிபதிகள் எண்ணிக்கை 31 என்ற முழு அளவை எட்டி இருக்கிறது.  சுமார் 58 ஆயிரத்து 669 வழக்குகள்  நிலுவையில் உள்ளன. ஆண்டுதோறும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், 25 ஆண்டுகளாக 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல் 20 ஆண்டுகளாக 100 வழக்குகளும், 15 ஆண்டுகளாக 593  வழக்குகளும், 10 ஆண்டுகளாக 4,977 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

2007ம் ஆண்டு 41, ஆயிரத்து 78 வழக்குகள் நிலுவையில் இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க 1988ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 18ல் இருந்து 26 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின்னர், நீதிபதிகள் எண்ணிக்கை 31 ஆக  அதிகமானது. எனவே, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். 2007ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை  அதிகரிக்கும்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 895ல் இருந்து 1,079 ஆக அதிகரிக்கப்பட்டபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. தற்போது 24 உச்சநீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள்  நிலுவையில் உள்ளன. மொத்த நீதிபதிகளில் 35 சதவீதம் (377 இடங்கள்) காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இதில் முழு முயற்சி செய்யாதவரை பணியிடங்களை நிரப்ப முடியாது. இதனால் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும். இந்த பரிந்துரை நாடாளுமன்ற நிலைக்குழுவிடமும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்படும்போது 62 வயது  தாண்டியவர்களும் 65 வயது வரை பணிபுரியலாம்.இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : Ranjan Gokai ,Supreme Court ,Modi , Supreme Court Justice, Prime Minister Modi, Supreme Court Chief Justice Ranjan Gokai, Letter
× RELATED லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான...