×

ஆரல்வாய்மொழியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை: நூலிழையில் உயிர் தப்பிய காற்றாலை ஊழியர்

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி போன்ற அச்சம் தரும் விலங்குகளும், மிகவும் சாதுவான மிளா, மான், முயல் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆரல்வாய்மொழி, முப்பந்தல் பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்படுகின்றன. இங்கு ஏராளமான பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு அதிகாலை வேளையில் பணியாளர்கள் ரீடிங் (கணக்கீடு) மேற்கொள்ள காற்றாலைகளுக்கு செல்வது வழக்கம். இதுதவிர காவலாளிகள் இரவு பகலாக காற்றாலைகளை காவல் காத்து வருகின்றனர்.இந்தநிலையில் ஆரல்வாய்மொழி, மூவேந்தர் நகர் பகுதிக்கு எதிரே வடக்கு மலை அடிவாரத்தில் உள்ள காற்றாலையில், 2 தினங்களுக்கு முன் காவலாளி ஒருவர் இரவு பணியின் போது ரோந்து சென்றுள்ளார். அப்போது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் சிறுத்தை ஒன்று படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்த காவலாளி அங்கிருந்து ஓட்டம் பிடித்து அலுவலகத்திற்கு வந்து விவரத்தை தெரிவித்தார். சிறிது நேரத்தில் அந்த சிறுத்தை அங்கிருந்து சென்று விட்டது.

நேற்றும் இதே பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் ரீடிங் எடுக்க ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற ஊழியர் சென்றுள்ளார். அப்போது அவரது உயரதிகாரியிடம் இருந்து ஒரு போன்கால் வந்துள்ளது. அவர் பைக்கை நிறுத்திவிட்டு போனை எடுத்து பேசியுள்ளார். திடீரென அவர் திரும்பி பார்க்கையில் சிறுத்தை ஒன்று சுமார் 100 அடி தொலைவில் அவரை பார்த்து வந்துக்கொண்டிருந்தது. இதனை கண்ட ஐயப்பன் பீதியில் உறைந்தார்.  உடனடியாக போன் இணைப்பை துண்டித்துவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று அலுவலகத்தில் பதுங்கிக்கொண்டார். இவர் ரீடிங் எடுக்க வேண்டிய இடத்தில் தான் அந்த சிறுத்தை நின்றுள்ளது. ேபான் வந்து பேசியதால் ஐயப்பன் சிறுத்தையிடம் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஒருவர் இதே வடக்குமலை பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை ஒன்று அவரது ஆட்டை அடித்து கொன்று தூக்கி சென்றது விட்டது. இதுபோல் கடந்த 5 மாதங்களுக்கு முன் முப்பந்தல் எதிரே ஓட்டல் பின்பகுதியில் கரடி ஒன்று புகுந்து மாட்டை கொடூரமாக தாக்கியது. இதனை கண்ட ஓட்டல்காரர் கரடியிடம் சிக்கிவிடாமல் இருக்க அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார். சிறுத்தை, கரடி உள்பட வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கவும், பசிக்கு வேட்டையாடவும் மலையில் இருந்து இறங்கி ஊருக்குள் வருகிறது. எனவே வனத்துறையினர் வன விலங்குகள் ஊருக்குள் வராத வண்ணம் மலையில் அவைகளுக்கு தேவையான தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் வனவிலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் முள்வேலி அமைக்க வேண்டும்.

தற்போது மலையடிவாரத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தையால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகளை மட்டுமல்ல, அவற்றை மேய்க்க செல்பவர்களையும், விவசாயம் மற்றும் காற்றாலை பணியில் ரீடிங் எடுக்க, பராமரிப்பு செய்ய, காவல் பணிக்காக செல்கிறவர்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே  வனத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை  மேற்கொண்டு மலையடிவாரத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடித்து  அடர்ந்த வனப்பகுதியில் விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் காற்றாலை பண்ணை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : windmill worker , Archeologist, leopard, author, windmill employee
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...