அரசு பள்ளியில் மகனை சேர்த்த லண்டன் தம்பதி

விழுப்புரம்: புதுச்சேரியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். பிஇ முடித்துவிட்டு சாப்ட்வேர் இன்ஜினியராக லண்டனில் வேலை செய்து வருகிறார். இவர் விழுப்புரம் அருகே காணையை சேர்ந்தசுபாஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து லண்டனில் குடியேறியுள்ளனர். அங்கு சிவபிரகாஷ் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார். மனைவி சுபாஷினி எம்இ படித்துள்ள நிலையில் லண்டனில் உள்ள பள்ளியில் 4 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு ஹரீஷ், அன்புச்செல்வன் என இரண்டு மகன்கள் உள்ளனர். அன்புச்செல்வனை லண்டனுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் அங்கேயே உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் சொந்த ஊரில் தங்கள் குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் ஊருக்கு வந்த அவர்கள் விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் உள்ள சுபாஷினி பெற்றோர் வீட்டில் தங்கி விழுப்புரம் சுற்று வட்டார பகுதியில் நல்ல அரசுப்பள்ளியை தேடி கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி நன்னாடு அரசுப்பள்ளியில் தங்களது மகனை 2ம் வகுப்பு சேர்த்துள்ளனர். தாத்தா வீட்டில் தங்கி படிக்கும் அன்புச்செல்வன் தினமும் 6 கி.மீ தூரம் பள்ளிக்குச்சென்று வருகிறான். லண்டன் குடியுரிமை பெற்ற தம்பதி தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்த சம்பவம் பெரும் கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அன்புச்செல்வன் தாய் சுபாஷினியிடம் கேட்டபோது, நானும், எனது கணவரும் ஆரம்பக்கல்வியை அரசுப்பள்ளியில்தான் படித்தோம். அங்குதான் ஒழுக்கம், நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளும் விதம் என அனைத்தையும் எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

× RELATED விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் மகனை...