×

பெரியபட்டணம் அருகே பனங்கருப்பட்டி தயாரிப்பில் பெண்கள் ஆர்வம்

ராமநாதபுரம்: பெரியபட்டணம் அருகே பனங்கருப்பட்டி தயாரிப்பில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.  வானம் பார்த்த பூமியாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் செழித்து வளர்கின்றன. இதிலிருந்து கிடைக்கும் பனை வெல்லம், பனை ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரை ஏழு மாதங்களில் மட்டும் பனங்கருப்பட்டி தயாரிக்க இயலும். பனை தொழிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பல லட்சம் பேர் மறைமுக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஜனவரியில் சீசன் துவங்கியதும், பனை மரங்கள் நிறைந்த பகுதிகளில் மரம் ஏறுவோர், பனை ஓலையில் குடிசை அமைத்து குடும்பமாக முகாமிடுவர். பட்டா நிலங்களில் வளரும் பனை மரங்களை குத்கைக்கு எடுப்பர். அங்கு தங்கி பதநீர் தினமும் சேகரித்து குடிசைக்குள் அடுப்பு வைத்து பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதனீரை அடுப்பில் உள்ள பெரிய பாத்திரத்தில் ஊற்றி கிளறி பாகு காய்ச்சுவர். பின், தேங்காய் சிரட்டையில் ஊற்றி அச்சு வார்ப்பர். சூடு தணிந்ததும் சிரட்டையில் இருந்து கருப்பட்டியை சேகரிப்பர். கருப்பட்டி சாப்பிட்ட பிறகும் நாவில் ருசி நீண்ட நேரம் இருக்கும். உடலுக்கு உடனடி சக்தி தரும். செரிமான பிரச்னை உள்ளோர் உணவுக்கு பின் தினமும் ஒரு சிறு துண்டு கருப்பட்டி சுவைக்கலாம். சுக்கு மல்லி காபியில் கருப்பட்டி சேர்ப்பதால் உடலுக்கு ஆற்றல் தந்து உடல் சோர்வை போக்கும். வளரும் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து பனங்கருப்பட்டி கொடுத்து பழகினால் கால்சியம் குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வளரும்.பெரியபட்டணம் பகுதியில் கருப்பட்டி தயாரிப்பில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பெரியபட்டணம் அருகே இலங்காமனி கிராமத்தைச் சேர்ந்த வசந்தா கூறுகையில், ‘10 கிலோ கருப்பட்டி பெட்டி ரூ.1,700. அதேசமயம் 10 கிலோ கருப்பட்டி வெளிசந்தையில் ரூ.2,500 வரை விற்கப்படுகிறது. கருப்பட்டிக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். கற்பகதருவான பனை மரங்களை அழிவின் பிடியில் இருந்து காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்….

The post பெரியபட்டணம் அருகே பனங்கருப்பட்டி தயாரிப்பில் பெண்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Panangarupatti ,Periyapatnam ,Ramanathapuram ,Ramanathapuram district ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’