×

ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்பட விஜயகாந்த் சொத்துகள் ஏலம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சொத்து, சாலிகிராமத்தில் உள்ள காலி மனை ஆகிய சொத்துகள் பொது ஏலத்துக்கு வருகிறது என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து விஜயகாந்த் சார்பில் கடன்  பெறப்பட்டுள்ளது. இதில் கடன் பாக்கி தொகையான ₹5 கோடியே 52 லட்சத்து 73  ஆயிரத்து 825 மற்றும் வட்டி, இதர செலவுகளை கட்டும்படி பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் பல முறை நினைவூட்டல் கடிதம் கொடுத்தும், பணத்தை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடனை வசூலிக்க விஜயகாந்தின் சொத்துகள்  ஏலத்துக்கு விட வங்கி முடிவு செய்துள்ளது.  அதன்படி விஜயகாந்துக்கு  சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மாமண்டூர் கிராமத்தில் உள்ளது. இந்தக் கல்லூரிக்கு சொந்தமான, ஏக்கர் 24.03 சென்ட் காலி இடம், குறைந்தபட்ச கேட்பு விலையாக ₹92  கோடியே 5 லட்சத்து 5 ஆயிரத்து 51 ஆகும். அதில் கட்டிடம் மட்டும் 4 லட்சத்து 38 ஆயிரத்து 956 சதுர அடியாகும்.

மேலும் சென்னை  சாலிகிராமத்தில் காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் 10271 சதுர அடி  குடியிருப்பு, வணிக கட்டிடம்  குறைந்தபட்ச கேட்பு விலையாக 4 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 849  ஆகும். சாலிகிராமம் கண்ணபிரான்  காலனியில் கண்ணம்மாள் தெருவிலுள்ள 271.91 சதுர மீட்டர் இடம் குறைந்தபட்ச கேட்பு விலையாக ₹3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 344 குறைந்தபட்ச கேட்பு விலையாகும்.இந்த சொத்துகள்  ஸ்ரீஆண்டாள் அழகர் எஜிகேஷனல் டிரஸ்ட் பெயரில் கடன்  வாங்கப்பட்டுள்ளது. ஜாமீன்தாரர்கள் பெயரில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா  பெயரில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதனால்தான் விஜயகாந்த்துக்கு சொந்தமான வீடு, காலிமனை ஆகியவை ஏலம் விடப்படுகிறது.

இந்த சொத்துகள் வரும் ஜூலை 26ம் தேதியில்  விற்பனை செய்யப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி  தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜயகாந்தின் கல்லூரி மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீடு, மனை ஆகியவை ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vijayakanth Property Auction , Andal Agrakar College of Engineering, Vijayakanth, Assets Auction
× RELATED ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த...