×

காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் அதிரடி உத்தரவால் பரபரப்பு: 3 விதமான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே கட்சி பதவியில் நீடிக்க முடியும்: மாவட்ட தலைவர்களுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: மாவட்ட தலைவர்கள் 3 விதமான போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தங்கள் கட்சி பதவிகளில் நீடிக்க முடியும் என்று கே.எஸ்.அழகிரி உத்தரவு பிறப்பித்தால் தமிழக காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்கான அவசர ஆலோசனை கூட்டம் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்யமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், வெல்ல பிரசாத் முன்னிலை வகித்தனர். மூத்த தலைவர்கள் தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி, ஜே.எம்.ஆரூண், செல்வபெருந்தகை, எம்.பி.,க்கள் வசந்தகுமார், ஜெயக்குமார் மற்றும் இரா.மனோகர், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, எம்.எல்.ஏ.,க்கள் பிரின்ஸ், ராஜேஷ், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவராஜ சேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: தமிழகத்தில் நீண்ட காலமாக கூட்டணி அரசியல்தான் செய்கிறோம். கூட்டணியில் இருந்தால் மட்டுமே கட்சியில் சீட் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கூட்டணியில் இல்லாவிட்டால் கட்சியில் உள்ள அப்பாவிகள் மட்டுமே போட்டியிட வருகிறார்கள். இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கான வழிகளை நாம் செய்தாக வேண்டும்.உள்ளாட்சி தேர்தல்களில் கணிசமான இடங்களில் போட்டியிட்டால் தான் நமது மதிப்பு உயரும். தேர்தல் வெற்றிக்காக கூட்டணி கட்சியினரை மட்டும் நம்பி இருக்ககூடாது. அவர்கள் உதவுவார்கள். நாம்தான் உழைத்து வெற்றி பெற வேண்டும். புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் போதெல்லாம் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக 20க்கும் மேற்பட்ட புதிய மாவட்ட தலைவர்களை நியமிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நான் அப்படி இல்லை.

எந்த மாவட்ட தலைவரையும் மாற்றப்போவது இல்லை. அதற்கு பதில் மாவட்ட தலைவர்கள் தங்கள் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் மூன்று விதமான போட்டி வைக்கப்போகிறேன். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மாவட்ட தலைவர்களாக நீடிக்க முடியும். வெற்றி பெறாதவர்கள் அவர்களாகவே விலகி விடலாம்.  முதல் போட்டியாக, மாவட்ட தலைவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் நிர்வாகிகளை போட்டியிட வைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நான் சீட் கேட்டிருந்தால் கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் நண்பர்கள் யாரும் பகையாளி ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடவில்லை. தேனி தொகுதியில் ஈவிகேஎஸ்.இளங்ேகாவன் தோற்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேர்தல் ஆணையம் செய்த குளறுபடியால் தான் அவர் தோற்றார். 


Tags : meeting ,district leaders ,KS Alagiri , Congress Advisory Meeting, District Heads, KS Alagiri
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...