×

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்க சிறப்பு நிதி 1000 கோடி வேண்டும்: டெல்லியில் ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை போக்க வரும் பட்ஜெட்டில் சிறப்பு நிதியாக 1000கோடி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  மத்திய பட்ஜெட் வரும் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் முன்னதாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. தமிழகம் சார்பில் துணை முதல்வரும், மாநில நிதி அமைச்சரருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

பின்னர் ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது: வறுமை ஒழிப்பு, வறட்சி, விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர் சேமிப்பை நாடு தழுவிய இயக்கமாக அறிவிக்க வேண்டும். காவிரி - கோதாவரி இணைப்புக்கான நிதியை, இந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும். கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு 6 ஆயிரம் கோடி நிதியை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதைத்தவிர சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுப்படுத்த தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.  தற்போது தமிழகத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கக்கூடிய மாநிலத்தின் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள 1000 கோடியை சிறப்பு நிதியாக உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட உதவியை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.



Tags : OPS ,Tamil Nadu ,Delhi , Tamil Nadu, Water Famine, Delhi, OPS
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்