அயர்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பம் மீது இனவெறி தாக்குதல்

லண்டன்: விடுமுறைக்காக அயர்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்தினர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் பிரசன் பட்டாச்சார்ஜி. இவர் விடுமுறையில் தனது குடும்பத்தினருடன் 3 நாள் சுற்றுலாவாக அயர்லாந்து சென்றார். அங்கு, பெல்பாஸ்டில் இருந்து துப்லினுக்கு ரயிலில் சென்றனர். அப்போது, அங்கிருந்த சக பயணி ஒருவர் அவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தினார். மேலும், அவர்களின் பேச்சு, நிறம் மற்றும் கலாச்சாரம் குறித்து தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பயணியின் இனவெறி பேச்சை பிரசன் குடும்பத்தினர் சகித்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த நபர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. அவர்களின் இருக்கைக்கு அருகே அமர்ந்து கொண்டு, அந்த நபர் தொல்லை கொடுத்துக் கொண்டே வந்துள்ளார். இதனால், அவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

ரயில் பாதுகாவலர் ஒருவர் அவர்களுடன் வந்துள்ளார். இவர் அந்த நபரை உட்காரும்படி கூறியுள்ளார். ஆனால், அவரது இனரீதியிலான தாக்குதலை நிறுத்துவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதனால், அந்த நபரின் இடையூறு தொடர்ந்து கொண்டே வந்துள்ளது. இவற்றை பார்த்துக் கொண்டே வந்த மற்றொரு பயணி, பிரசனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அயர்லாந்து பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது. இது பற்றி புலம்பெயர்வு சங்க தகவல் தொடர்பு மற்றும் ஆலோசனை மேலாளர் பைப்பா உல்நாவ் கூறுகையில், “ இந்த சம்பவத்தின் மூலம் இனவெறியை கையாளுவதற்கு செயல்திறன் மிக்க அணுகுமுறை மேலும் தேவை என்பது தெரிகிறது. இதுபோன்ற விஷயங்களுக்கு நாம் எவ்வாறு பதில் அளிப்பது என்பது மிகவும் முக்கியமானது. இவை தவிர்க்கப்படவேண்டும்,” என்றார்.

அயர்லாந்து ரயில்வே செய்தி தொடர்பாளர் பாரி கென்னி கூறுகையில், “  இந்த சம்பவம் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. எங்களின் ரயில் சேவையின்போது நடந்த இதுபோன்ற இழிவான நடவடிக்கைக்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,” என்றார்.

Related Stories: