×

நாடாளுமன்ற துளிகள்

பீகார் குழந்தைகளுக்கு அஞ்சலி

மாநிலங்களவை நேற்று காலை தொடங்கியதும், நியூசிலாந்து, இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்காக அவை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அப்போது, பீகாரில் மூளைக் காய்ச்சலால் இறந்த குழந்தைகளுக்கும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதை வெங்கையா ஏற்றுக் கொண்டதால், இறந்த குழந்தைகளுக்காக அவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

‘குழந்தைகள் இறந்ததை கொலை என கூறலாம்’

மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினய் விஷ்வத்து பேசுகையில், ‘‘குழந்தைகள் இறந்ததை கொலை என்றுதான் அழைக்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக 130 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 180 குழந்தைகள் இறந்துள்ளனர். மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள், வசதிகள் மருத்துவமனைகளில் இல்லை.  இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’’ என்றார்.  காங்கிரஸ், இதர கட்சிகள் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால், அவை தலைவர் இதற்கு அனுமதிக்கவில்லை.

மசோதா 5 ஆண்டுகள் நிலுவையில் இருந்தால்...

மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், ‘`16வது மக்களவை கடந்த மாதம் கலைக்கப்பட்டது.  அப்போது, 22 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தன. இவ்வாறு ஒரு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் 5 ஆண்டுகள் நிலுவையில் இருந்தால், அந்த மசோதா காலாவதியானதாக கருதப்படும். மாநிலங்களவையில் இவ்வாறு 3 மசோதாக்கள், 20க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நிலுவையில் உள்ளன,’’ என்றார்.

டாக்டரை தாக்கினால் ஜாமீன் வழங்கக்கூடாது

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி நோயாளி இறந்ததால் அவரது உறவினர்கள் பயிற்சி மருத்துவர்கள் இரண்டு பேரை சரமாரியாக தாக்கினார்கள். இதை கண்டித்து மருத்துவர்கள் ஒரு வாரம் வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னை மாநிலங்களவையில் நேற்று எதிரொலித்தது.

கேள்வி நேரத்தின்போது பாஜ உறுப்பினர் விகாஸ் மகத்மே பேசுகையில், “கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை மேற்கு வங்க அரசு சரியாக கையாளவில்லை. மருத்துவர்கள் தாக்கப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை. மருத்துவர்களை நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் தாக்குவதை ஜாமீனில் வர முடியாத குற்றமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்” என்றார்.

சுருக்கமாக பேசுங்கள் சபாநாயகர் அறிவுரை

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முதல் முறை எம்பி.யான கவுசல் கிஷோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவையில் பேசிய அவர், முதலில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை பாராட்டி பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, “விஷயத்துக்கு வாருங்கள்... மரம் நடுதல் குறித்த கேள்விகளை கேளுங்கள்,” என்றார்.  அடுத்ததாக பேசுவதற்கு வந்த அஜய் மிஸ்ரா தேனியிடமும், “மிகப்பெரிய பின்னணி தேவையில்லை. சுருக்கமாக பேசுங்கள்,” என்று கேட்டுக் கொண்டார்.

ஓமியோபதி குழு பதவி காலம் நீட்டிப்பு

 ஓமியோபதி மத்திய குழுவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான மசோதா, மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ‘ஓமியோபதி மத்திய குழு திருத்த மசோதா-2019’ என்ற இந்த மசோதாவை, ஆயுஷ் அமைச்சர் சார்பில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தாக்கல் செய்தார். இந்த  மசோதாவின்படி, ஓமியோபதி  குழுவில் உள்ள ஆளுநர்களின் பதவிக் காலம் தற்போதுள்ள ஒரு ஆண்டில் இருந்து 2 ஆண்டாக உயர்த்தப்படுகிறது. இதனால், இந்த குழுவில் உள்ள ஆளுநர்களின் பதவிக் காலம் கடந்த மே 17ம் தேதியில் இருந்து மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.

நாங்க ஸ்கூல் பசங்களா? எதிர்க்கட்சிகள் அமளி

சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் மசோதா குறித்து பேசியபோது, சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேசியபடியே இருந்தனர். இதை கண்ட சபாநாயகர், “நீங்கள் பேசிக் கொண்டே இருந்தால் உங்கள் பெயரை விவாத பட்டியலில் இருந்து நீக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவேன்,” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில்  ஈடுபட்டனர்.  ‘இது குழந்தைகள் பள்ளிக் கூடம் கிடையாது. நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ என்று கோஷமிட்டனர்.


Tags : Parliament , Droplets of Parliament
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...