×

கேரளாவில் பத்மநாபசுவாமி கோயில் உட்பட 3 முக்கிய கோயில்களின் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் ; பாதுகாப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பத்மநாபசுவாமி கோயில், சபரிமலை, குருவாயூர் கோயில்கள் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐஎஸ்  தீவிரவாத இயக்கத்தில்,  இந்தியா, இலங்கை உள்பட  பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். இவர்கள்தான் ஈராக், சிரியா,  ஆப்கானிஸ்தான் நாடுகளில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.  தற்போது ஈராக், சிரியா நாடுகளில் முன்பைபோல் செயல்பட முடியாததால், தங்கள்  சொந்த நாடுகளுக்கு திரும்பி சென்று தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள்  திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, இந்தியாவிலும் பல்வேறு இடங்களில்  தாக்குதலை நடத்த ஐஎஸ் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில்  பெரிய வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கேரள அரசிற்கு மத்திய உள்துறை தகவல்  அனுப்பியுள்ளது.  மேலும், பக்தர்கள் அதிகம் வரும்  திருவனந்தபுரம்  பத்மநாபசுவாமி கோயில், சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட கோயில்களுக்கும்   பாதுகாப்பை அதிகரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு மிக  பலத்த பாதுகாப்பும்,  பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கோயிலை  சுற்றியுள்ள  பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது, வீடியோ மற்றும் புகைப்படம்  எடுப்பது  மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்   விதிக்கப்பட்டுள்ளன. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கோயில் அருகே கொண்டு செல்ல தடை   விதிக்கப்பட்டுள்ளது.


Tags : temples ,Padmanabhaswamy Temple ,Kerala , Attack 3 major temples, including the Padmanabhaswamy Temple,Kerala
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு