×

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: ஆசிரியர் பணி மாறுதல் தொடர்பாக கவுன்சலிங்கின் போது கல்வி அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த பணியிட மாறுதல் கவுன்சலிங்கில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2019-20 கல்வி ஆண்டில் பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை:
* தொடக்கப் பள்ளி மற்றும்  நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் ஒன்றியத்துக்குள், நகராட்சிக்குள், மாநகராட்சிக்குள் முதலில் பரிசீலிக்க வேண்டும்.
* வருவாய் மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் பரிசீலிக்க வேண்டும்.
* அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் பரிசீலிக்க வேண்டும்.
* பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம் ஆகிய இரண்டிலும் பணி நிரவல், ஆசிரியர்கள் மாறுதல்கள், அதையொட்டி பதவி உயர்வு என்ற  முறையில் கவுன்சலிங் நடத்த வேண்டும்.
* மேற்கண்ட இயக்கங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை  கவுன்சலிங்கில் காட்டும் போது ஆசிரியர் இன்றி உபரியாக உள்ள காலிப் பணியிடங்களை அந்தந்த இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் அந்த பணியிடங்கள் கவுன்சலிங்கில் காண்பிக்க கூடாது. அந்த பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கவும் கூடாது.
* பள்ளிக் கல்வித்துறையில் 6, 7, 8 வகுப்புகளில் காலியாகும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், ஒரு முறை பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் பெற்று பணியேற்றவுடன் அந்த பணியிடம் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடமாகவே  கருத்தப்பட வேண்டும்.
* ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் முறையில் அந்த ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யப்படுவதால் பயணப்படி வழங்கப்பட மாட்டாது.
* அரசு பெண்கள்  உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர்  நியமிக்கப்பட வேண்டும்.
* நிர்வாக காரணங்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்த அலுவலர்களால் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் ஆணை எந்த நேரத்திலும் வழங்கப்படலாம்.
* ஒவ்வொரு பணித் தொகுப்பிலும் 100 பணியிடங்களுக்கு மேல் காலி ஏற்படும் நிலையில் மட்டுமே பொது மாறுதல் கவுன்சலிங் மேற்கொள்ளப்படும்.
* அனைவருக்கும் கல்வி இயக்கம் கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணி மாறுதல் தொடர்பான நெறிமுறைகள் தனியே வழங்கப்படும்.
* அனைத்து வகை பணிமாறுதல் இணைய தளம் மூலம் நடத்தப்பட வேண்டும். மேற்கண்ட 18க்கும் மேற்பட்ட நெறிமுறைகள் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் ஒரு வாரத்தில் பணியிட மாறுதலுக்கான கவுன்சலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் பணியும் நடக்கும். இதன்படி சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பணியிட மாறுதலில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. மேலும், இதற்கு பிறகு சுமார் ஆசிரியர் பணியிடங்கள் காலி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tags : Swap Counseling Guidelines, Teachers
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...