×

வேலூர் அருகே கிராம மக்கள் ஆவேசம் ‘தண்ணீர் பிரச்னைய தீர்க்காம அரசு சாதனை படம் காட்டுறீங்களா’

* அரசு ஊழியர்களுக்கு சரமாரி அடி, உதை
* வாகனம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு

வேலூர்: ‘தண்ணீர் பிரச்னையை தீர்க்காமல் சாதனை படம் காட்டுறீங்களா’ என்று கூறி செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊழியர்களுக்கு சரமாரி அடி, உதை விழுந்தது. அத்துடன் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் விளம்பர வாகனத்தின் மூலமாக அரசின் சாதனைகள் குறித்த திரைக்காட்சிகள் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிராமங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் கணியம்பாடி ஒன்றியம் மோத்தக்கல் கிராமத்திற்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் விளம்பர வாகனம் சென்றது. வண்டியில் டெக்னிக்கல் ஆபரேட்டர் வெங்கடேசன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் குலசேகரன் ஆகியோர் சென்றனர். வண்டியை டிரைவர் பாலகோபாலன் ஓட்டிச் சென்றார். ஊரின் மையப்பகுதியில் விளம்பர வாகனம் நிறுத்தப்பட்டது. இதனை கண்ட கிராம மக்கள் திடீரென்று விளம்பர வாகனத்தின் முன் திரண்டனர். வாகனத்தின் பின்பக்க கதவை திறந்து ஒளிபரப்பு இயந்திரத்தை சரிபார்த்து கொண்டிருந்த டெக்னிக்கல் ஆபரேட்டரிடம், ‘என்ன செய்யப்போறீங்க?’ என்று கேள்வி எழுப்பினர். அப்போது ஊழியர்கள், அரசின் சாதனைகள் குறித்து விளம்பர படம் காண்பிக்கப் போவதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள், ‘ஊரெல்லாம் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுது, அதை தீர்க்க நடவடிக்கை எடுக்காம, சாதனை விளக்கப் படம் காட்டுறீங்களா?’ என்று ஆவேசமுடன் கேட்டனர். அதற்கு ஊழியர்கள், ‘அதிகாரிகள் சொல்வதை நாங்கள் செய்கிறோம்’, என்று கூறியபடி, அரசின் சாதனை விளம்பர படத்தை ஒளிபரப்பு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஊழியர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரைசாமி, வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையின்போது போலீசாரை பார்த்து, ‘கடந்த 6 மாதங்களாக குடிநீர் வரவில்லை. பிறகு எதற்கு இந்த சாதனை விளம்பரம்? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனிடையே பொதுமக்களின் எதிர்ப்பால் சாதனை விளக்க விளம்பர வாகனத்தை கம்பசமுத்திரம் கிராமத்திற்கு ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

Tags : Village Vellore ,Vellore , Villagers near Vellore ,angry about water problem
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...