×

விபத்தில் பலியான விமானப்படை வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் கோவையில் தகனம்

கோவை: விமான விபத்தில் பலியான விமான படை வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் கோவையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.  இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக போர் விமானம் கடந்த 3ம் தேதி அசாம் மாநிலம் ஜோர்ஹத் பகுதியில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் உள்ள மென்சுகா விமான படை தளத்துக்கு சென்றது. விமானத்தில் 13 வீரர்கள் இருந்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானப்படை வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாங் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த 13 வீரர்களும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் திருச்சூரை பூர்வீகமாக கொண்டு அசாமில் பணியாற்றி வந்த வினோத் ஹரிகரன் என்பவரும் ஒருவர். இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர்.

கடந்த 2011ம் ஆண்டில் விமானப்படையில் சேர்ந்த வினோத் ஹரிகரன், ஸ்குவாட்ரன் லீடர் ஆக பணியாற்றி வந்தார். இவரது வீடு கோவை சிங்காநல்லூரில் உள்ளது. அவருடைய உடல் ராணுவ விமானம் மூலம் நேற்று காலை கோவை சூலூர் விமான படை தளத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஹரிகரனின் குடும்பத்தினர், சூலூர் விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராணுவ வாகனம் மூலம் சிங்காநல்லூருக்கு உடல் எடுத்து செல்லப்பட்டது.  தமிழக காவல் துறை சார்பில் கோவை மாநகர துணை ஆணையர் பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று ராணுவ அதிகாரிகளும், விமானப்படை அதிகாரிகளும், சக வீரர்களும், உறவினர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சிங்காநல்லூரில் உள்ள மின்மயானத்தில் 33 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகளை விமான படை வீரரின் சகோதரரும், பஞ்சாப்பில் உள்ள விமானப்படை தளம் ஒன்றில் ஸ்குவாட்ரன் லீடராக பணியாற்றும் விவேக் செய்தார்.

Tags : Air Force ,soldier , Soldier's Body, Military Honors, Coimbatore
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...