×

சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை குழந்தைகள் விற்பனை வழக்கில் கொல்லிமலை மதபோதகர் கைது

சேந்தமங்கலம்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில், கொல்லிமலையைச் சேர்ந்த மதபோதகரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை நடைபெற்றது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கினை முதலில் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வந்தனர். இதில், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடமிருந்து ஏராளமான குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரித்து, ராசிபுரம் நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், சகோதரர் நந்தகுமார், கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோடு தனியார் மருத்துவமனை நர்ஸ் பர்வீன், சேலம் நர்ஸ் சாந்தி, பெங்களூரு அழகுக்கலை நிபுணர் ரேகா மற்றும் புரோக்கர்கள் ஹசீனா, அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய 11 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிபிசிஐடி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குழந்தைகள் விற்பனையில் கொல்லிமலை ஆரியூர்நாடு கிழக்குவளவு பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி(45) என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரை நேற்று மதியம் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட பொன்னுசாமி, திருப்புலிநாடு புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : CBIIT ,clergyman , CBCID police, children selling, Kolli Hills, cleric arrested
× RELATED சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி...