×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வாயில் பிளாஸ்திரி ஒட்டி விவசாயிகள் நூதன போராட்டம்: குறைதீர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

தஞ்சை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடகோரி தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து வாயில் பிளாஸ்திரி ஒட்டி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி கொண்டும் அதில் சிறு பைப் வைத்து கொண்டும், காய்ந்துபோன உளுந்து செடிகளுடன் கூட்டரங்குக்குள் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்னர் கூட்டம் நடந்த அரங்குக்கு முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் பேசும்போது, காவிரி டெல்டாவில் விவசாயத்தை நாசமடைய செய்யும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் பேசும்போது, காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி சென்ற நவம்பர், டிசம்பர் மாதத்துக்குரிய தண்ணீரை கேட்டு பெற தமிழக அரசு தவறிவிட்டது. தற்போது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி 9.19 டிஎம்சி நீரையும் கர்நாடகா தர மறுத்து வருகிறது. உடனடியாக கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

8-வது ஆண்டாக குறுவை சாகுபடி டெல்டாவில் பொய்த்துபோய்விட்டது. இதற்கு கர்நாடகா நமக்குரிய தண்ணீர் தர மறுப்பதே காரணம். எனவே சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை கர்நாடகா தர வேண்டும். இதற்கு தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் வழக்கு தொடர வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதையடுத்து கண்ணன், விமல்நாதன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags : Hydro-carbon thimm, plastics by peasants, struggle
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...