×

முதல் சட்டமாக முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: புதிய மக்களவையில் முதல் சட்டமாக முத்தலாக் மசோதா நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் மதத்தில் இருந்து வந்தது. இதை தடுப்பதற்காக முத்தலாக் மசோதா (முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்) கடந்த பாஜ ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மாநிலங்களவையில் நிறைவேறாமல் இருந்தது. இதனால், கடந்தாண்டு செப்டம்பர் மாதமும், கடந்த பிப்ரவரியிலும் இரு முறை இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 16வது மக்களவை பதவிக்காலம் முடிந்து விட்டதால், இந்த முத்தலாக் தடை சட்டமும் காலாவதியாகி விட்டது.

தற்போது தேர்தல் முடிந்து 17வது மக்களவை தொடங்கியதும், முதல் சட்டமாக முத்தலாக் தடை  மசோதாவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படும் என்பதால்,  குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெறும் வகையில் முத்தலாக் சட்டத்தில் தற்போது திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.  மக்களவையில் நேற்று முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்யும்படி சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க சபாநாயகர் அனுமதி அளித்தார்.  காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர்  பேசுகையில், ‘‘முத்தலாக் சட்டத்தில் சிவில் சட்டமும், கிரிமினல் சட்டமும்  ஒன்றாக சேர்ந்துள்ளதால், இதை நான் எதிர்க்கிறேன். இது, ஏதோ முஸ்லிம்  மதத்தில் மட்டும் பெண்கள்கைவிடப்படுவதுபோல் உள்ளது. கைவிடப்படும் அனைத்து  மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான சட்டம் கொண்டு  வர வேண்டும்,’’ என்றார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி ஓவைசி  பேசுகையில், ‘‘பாஜ.வுக்கு முஸ்லிம் பெண்கள் மீது அதிக பாசம். ஆனால்,  கேரளாவில் சபரிமலைக்கு செல்லும் இந்து பெண்களின் உரிமையை பாஜ  எதிர்க்கிறது. முத்தலாக் மசோதா, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது.  குற்றம் சுமத்தப்படும் முஸ்லிம் ஆண்களுக்கு இந்த சட்டத்தில் 3 ஆண்டு சிறை  தண்டனை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதே குற்றத்துக்காக முஸ்லிம் அல்லாத  இதர ஆண்களுக்கு ஓராண்டு ஆண்டுதான் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது,’’ என்றார்.  இதேபோல், எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். முத்தலாக் மசோதா மீது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் ஆதரவாக 186 உறுப்பினர்களும், எதிராக 74 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதையடுத்து, முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்து ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ‘‘பாலின சமத்துவத்துக்கும், நீதிக்கும் இந்த சட்டம் அவசியமானது. இது மதம் சம்பந்தமான விஷயம் அல்ல, பெண்கள் நீதி சம்பந்தப்பட்டது. மொத்தம் 543 முத்தலாக் வழக்குகள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முத்தலாக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பின்பும், 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பெண்களின் கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம். அதை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டத்தை இயற்றுவது நாடாளுமன்றத்தின் வேலை. அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியதை நீதிமன்றத்திடம் விட்டு விட வேண்டும்,’’ என்றார்.

மக்களவையை நடத்த 4 பாஜ உறுப்பினர்கள்
மக்களவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை வழி நடத்தும் குழுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நேற்று நடந்த மக்களவை கூட்டத்தின் போது, தாங்கள் இல்லாதபோது அவையை வழி நடத்தும் குழுவுக்கு 4 பாஜ எம்பி.க்களின்  பெயர்களை சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரை செய்தார். அதில், ரமாதேவி, கிரித் சோலன்கி, ராஜேந்திர அகர்வால், மீனாஷி லெகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பின்னர், ஓம் பிர்லா கூறுகையில், மற்ற கட்சிகளும் தங்கள் குழுவின் தலைவர்களின் பெயரை அறிவித்தால், நாடாளுமன்றத்தை வழி நடத்தும் குழுவிற்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்,’’ என்றார். வழக்கமாக, இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

கோஷமிடுவதை கைவிட வேண்டும்:சபாநாயகர் வேண்டுகோள்
மக்களவை சபாநாயகர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அவையின் கவுரவத்தை உயர்த்த பணியாற்றுவேன். எம்பி.க்கள் அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை வழங்கி உள்ளேன். இதர ஜனநாயக நாடுகளின் நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை, மக்களவையில் பின்பற்ற நடவடிக்கை எடுப்பேன். நான் நேற்று அவையை நடத்தும்போது, கடுமையாக நடந்து கொண்டது போல் இருக்கலாம். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனையின் படியும் நான் செயல்பட்டேன். அவர்கள் கோரிக்கைப்படி, முத்தலாக் மசோதா தாக்கல் செய்ய ஓட்டெடுப்பு நடத்தினேன். அவையின் மையப் பகுதியில் வாழ்க, ஒழிக கோஷமிடுவது, பதாகைகளை கொண்டு வருவது போன்றவற்றை கைவிட வேண்டும். இதில் ஆர்வம் உள்ளவர்கள் அவைக்கு வெளியே முறையாக எதிர்ப்பு தெரிவிக்கலாம். எம்பி.க்களுக்கு பேச வாய்ப்பு அளிப்பதில், எண்ணிக்கை பலத்தை கணக்கிட மாட்டேன். ஒவ்வொரு எம்பி.யும் ஒவ்வொரு தொகுதியின் பிரதிநிதி. அவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும்,’’ என்றார்.  



Tags : First Law: Opposition Opposition , Muthalak Bill, Opposition parties, New Lok Sabha
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...