×

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் 28 கோடியில் பசுமை பூங்கா : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: ஆவடி, பருத்திப்பட்டு ஏரியில் 28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பருத்திப்பட்டு ஏரியின் சுற்றுச்சூழலை  மீட்டெடுக்கும் பொருட்டு 28 கோடியே 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். இந்த பசுமை பூங்காவில், ஏரியை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, திறந்தவெளி அரங்கம், பார்வை மேடைகள், சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், நிர்வாக மற்றும் சிற்றுண்டி கட்டிடம், படகுகள் மூலம் ஏரியின் அழகை கண்டுகளிக்க படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், ஆட்ரம்பாக்கம் கிராமத்தின் அருகில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே 7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, வேலூர் மாவட்டம் மாசிகம் கிராமத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள நிலத்தடி தடுப்பு சுவர், கடலூர் மாவட்டம் வீசூர் மற்றும் பெரிய காட்டுப்பாளையம் ஓடைகளை புனரமைத்து வலுப்படுத்தும் திட்டம், சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமம் பெரியபள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திருச்சி மாவட்டம் கல்லணை கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், மதுரை மாவட்டத்தில் நதி புனரமைப்பு திட்டம், திண்டுக்கல் மாவட்டம் விருப்பாட்சி கிராமத்தின் அருகே நங்காஞ்சியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் வேலக்கவுண்டன்பட்டி, சீவல்சரகு கிராமத்தின் அருகில் குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் என மொத்தம் 217 கோடியே 18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணி துறையின் நீர்வள திட்டங்கள் மற்றும் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 


Tags : Edappady ,Avadi Cotton Lake ,Green Park , 28 crore green park, Avadi Cotton Lake
× RELATED பருத்திப்பட்டு பசுமை பூங்காவில்...