×

கர்ப்பிணியை தாக்கிய விவகாரம் கமிஷனர் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மதுரை அருகே கொந்தகை கிராமம், முனியாண்டி புரத்தை சேர்ந்த காளீஸ்வரன் மனைவி சித்ரா. இவர், 7 மாத கர்ப்பிணி. கடந்த 18ம் தேதி அப்பகுதியில் நடந்த கோயில் திருவிழாவின் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் காளீஸ்வரனை போலீஸ் எஸ்ஐ ஜான்சன் கைது செய்ய முயன்ற போது சித்ரா தடுத்துள்ளார். இதில் கோபமடைந்த எஸ்ஐ கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சித்ராவிற்கு வயிற்றில் கடும் வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து எஸ்ஐ ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே மதுரையில் லத்தியை வீசி போலீஸ் தாக்கியதில் விவேகானந்தகுமார் பலியான நிலையில் மேலும் ஒரு போலீஸ்காரர் தாக்குதலில் கர்ப்பிணி பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் இந்த செய்தி நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் வெளிவந்தையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து மதுரை போலீஸ் கமிஷனர் உரிய விசாரணை நடத்தி 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


Tags : commissioner ,Human Rights Commission , commissioner,should respond , 2 weeks,pregnant woman
× RELATED மதுரை உதவி ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து..!!