×

குடிநீர் பிரச்னையை போக்க வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம், முற்றுகை

துரைப்பாக்கம்: குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து துரைப்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்கு உட்பட்ட  துரைப்பாக்கம் கற்பக விநாயகா நகர், மகாத்மா காந்தி நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், கஸ்தூரிபாய் நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடும் வறட்சி காரணமாக இப்பகுதியில் கடந்த 2 மாத காலமாக 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும், கடந்த சில நாட்களாக மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுவதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதிக்கு சீரான மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி கற்பக விநாயகா நகரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் 100 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சீரான குடிநீர் வழங்க கோரியும், சுகாதாரமான குடிநீர் வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர். தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆலந்தூர் 160வது வட்ட திமுக சார்பில்,  ஆலந்தூர் மண்டல குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று  நடந்தது. வட்ட செயலாளர் முரளிகிருஷ்ணன் தலைைம வகித்தார். முன்னாள்  நகரமன்ற துணை தலைவர் துரைவேலு, பொதுக்குழு உறுப்பினர் பூபாலன், மாவட்ட  இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் பாரதி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன்  முற்றுகை போராட்டத்தை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் கலாநிதி குணாளன்,  ஆலந்தூர் இளைஞரணி அமைப்பாளர் பிரவீன்குமார், ராஜவேல், கீர்த்திராஜ்,  சாந்தி, கல்பனா மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags : protests ,DMK , DMK protests,drinking water problem, blockade
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...