×

உலக கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிராக கவுரவமாக தோற்குமா? கலக்கத்தில் ஆப்கானிஸ்தான்

சவுத்தாம்ப்டன்: தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கணக்கை தொடங்க முடியாமல் பரிதவித்து வரும் ஆப்கானிஸ்தான் அணி, இன்று தனது 6வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியை பெரும் கலக்கத்துடன் சந்திக்கிறது.
கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கிய ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், முதல் 4 இடங்களைப் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறப் போகும் அணிகள் எவை என்பதில் இப்போதே ஒரு தெளிவு பிறந்துவிட்டது என்றே சொல்லலாம். இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்னும் ஒன்று அல்லது 2 வெற்றியை வசப்படுத்தினாலே நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட முடியும். வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் 3 முதல் 4 வெற்றிகளைப் பெற்றால் முன்னேறலாம் என்ற நூலிழை நம்பிக்கையோடு காத்திருக்கின்றன. தென் ஆப்ரிக்கா அணியின் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், தொடர்ச்சியாக 5 தோல்விகளுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி மிகப் பரிதாபமான நிலையில் உள்ளது. பெரிய அணிகளுக்கு ஒரு சில அதிர்ச்சி தோல்விகளையாவது பரிசளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளால் அந்த அணியின் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர்.

குறிப்பாக, நட்சத்திர ஸ்பின்னர் ரஷித் கான் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாதது ஆப்கானிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இந்த நிலையில், தனது 6வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியின் சவாலை ஆப்கானிஸ்தான் சந்திக்கிறது. பேட்டிங்கில் ஓரளவு சமாளித்தாலும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ஆப்கன் வீரர்கள், முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினால் மட்டுமே கவுரமாக தோற்கலாம் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்குகின்றனர்.
அதே சமயம், நல்ல பார்மில் உள்ள இந்திய அணி மிகுந்த தன்னம்பிக்கையும் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. முக்கிய வீரர்கள் காயம் அடைந்து வருவது மட்டுமே இந்திய அணிக்கு உள்ள ஒரே பிரச்னை. ஏற்கனவே தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் மற்றும் ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். புவனேஷ்வருக்கு பதிலாக ஷமி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் ஷங்கர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அதிரடி வீரர் ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

மழை வர வாய்ப்பு இல்லை என்ற வானிலை மைய தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலில் பேட் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், இந்திய அணி 400 ரன்னுக்கு மேல் குவித்து அசத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ரிஷப் பன்ட்.
ஆப்கானிஸ்தான்: குல்பாதின் நயிப் (கேப்டன்), அஸ்கர் ஆப்கன், ஹமித் ஹசன், ஹஸ்ரதுல்லா ஸசாய், நஜிபுல்லா ஸத்ரன், ரகமத் ஷா, சமியுல்லா ஷின்வாரி, அப்தாப் ஆலம், தவ்லத் ஸத்ரன், ஹஷ்மதுல்லா ஷாகிதி, முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நூர் அலி ஸத்ரன், ரஷித் கான், இக்ராம் அலி கில்.

Tags : World Cricket: Will India Defeat ,India ,Afghanistan , World Cricket, India Defeat Against India?
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...