×

ஈரான் மீதான தாக்குதல் உத்தரவை ரத்து செய்தார் டிரம்ப் : கடைசி நேரத்தில் மனமாற்றம்

வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அளித்த அனுமதியை அமெரிக்க அதிபர் டிரம்ப், உடனடியாக ரத்து செய்தார். இதனால், போர் தவிர்க்கப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த நாட்டுடன் செய்திருந்த அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மேலும், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளும் விதித்தார். மேலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என மற்ற நாடுகளுக்கும் தடை விதித்தார்.  இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த மாதம் சவுதிக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்நிலையில், ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹார்மஸ்கான் வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சில தினங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தியது. இதனால் கோபமடைந்த டிரம்ப், ‘‘ஈரான் மிகப்பெரிய தவறை செய்து விட்டது,’’ என கொந்தளித்தார். இதைத் தொடர்ந்து, ‘ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்’ என அமெரிக்க நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் உருவானது. இந்ந சூழ்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது முடிவை ரத்து செய்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டால், அது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்தான், டிரம்ப் தனது முடிவை கடைசி நேரத்தில் கைவிட்டதாக கூறப்படுகிறது.

10 நிமிடங்களுக்கு முன் நிறுத்தினேன்

அதிபர் டிரம்ப் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க விமானங்கள் குண்டுகளை நிரப்பிக் கொண்டு தயார் நிலையில் இருந்தன. தாக்குதல் நடத்தினால் ஈரான் தரப்பில் 150 பேர்கள் வரை பலியாவார்கள் என ராணுவ தளபதி தெரிவித்தார். அதிக பலி எண்ணிக்கையை தவிர்ப்பதற்காக தாக்குதலுக்கு 10 நிமிடங்களுக்கு முன் நான் நிறுத்தினேன். ஈரான் மீது குண்டு வீசுவதற்கு இப்போது ஒன்றும் அவசரம் இல்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Trump ,attack ,Iran , Trump cancels ,attack on Iran
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...