யோகா அனைவருக்கும் சொந்தமானது : பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘`யோகா அனைவருக்கும் சொந்தமானது; நாம் அனைவரும் யோகாவுக்கு சொந்தமானவர்கள்’ என 5வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கடந்த 2015ம் ஆண்டு முதல், ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடந்தன. உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசிய விவரம் பின்வருமாறு: பல நூற்றாண்டுகளாக இவ்வுலகில் நீடித்து நிலைத்திருக்கும் யோகா சாதி, மதம், இனம், நாடு, ஆண் பெண் என்ற எந்த பாகுபாடும் அற்றது. உடல் நலம், நிலையான மனம், ஒருங்கிணைப்பு ஆகியவையே யோகாவின் முக்கிய பண்புகளாகும். இதனை யோகா சரியான விகிதத்தில் வழங்குகிறது. இத்தகைய யோகாவை நாம் நமது வாழ்வின் ஓர் அங்கமாக்கி கொள்ள வேண்டும்.

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் யோகா பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக நாம் கூறி கொள்ளலாம். ஆனால், நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களுக்கும் பழங்குடியின பகுதிகளுக்கும் நாம் இதனை கொண்டு சேர்க்க வேண்டும். களைப்புற்ற உடலாலும், சோர்வுற்ற சிதைந்த மனதுடனும் கனவுகளை கட்டி எழுப்பவோ, இலக்குகளை அடையவோ முடியாது. எனவே யோகாவை பிரபலப்படுத்தி, அதன் கட்டமைப்பை வலுவானதாக்க வேண்டும். அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. யோகாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், யோகா பயிற்சியாளர்கள், யோகா நிறுவனங்களின் தேவையும் அதிகரிக்கும். அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றும் யோகாவுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. எனவே உலக மக்கள் அனைவரும் யோகாவை கற்றுணர வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

ராஷ்டிரபதி பவனில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அதேபோன்று செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள்  கலந்து கொண்டனர். டெல்லியில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய போது, ``யோகா மதம்  சார்ந்ததல்ல. மனிதனின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் நலனுக்காக அனைத்து  மதங்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது. இதனை இந்தியர்கள் மட்டுமின்றி உலகின்  177 நாடுகளை சேர்ந்தவர்கள் இன்று கடைபிடிக்கின்றனர்’’ என்று கூறினார்.

மக்கள் இயக்கமாக வேண்டும்

டெல்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ``நாம் அனைவரும் இணைந்து யோகாவை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். யோகா நிகழ்ச்சி அரசின் நிகழ்ச்சியோ அல்லது பிரதமர் மோடியின் நிகழ்ச்சியோ அல்ல. மோடியின் முயற்சியால் யோகா உலகறிய செய்யப்பட்டது. இது உடலுக்கானது, மனதுக்கானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாறி வரும் வாழ்க்கை முறைக்கேற்ப, பள்ளி பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.

யோகா இதயத்துக்கானது

பிரதமர் மோடி பேசிய போது, ``இன்றைய சூழலில் நாட்டில் இருதய நோய் பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. இளைஞர்கள் பெருமளவில் இதயநோய் தாக்கத்துக்குள்ளாகிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. இருதயத்தை சிறந்த முறையில் பாதுகாக்கவும் இதயநோய்களில் இருந்து தப்பிக்கவும் யோகா சிறந்த சிகிச்சை முறையாக உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

ராகுலுக்கு குட்டு

திருவனந்தபுரத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாஜ தேசிய செயலாளர் ராம் மாதவ் கூறுகையில், ``சில மாணவர்களால் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது கவனம் செலுத்த முடியாது. தேர்வு நேரத்தில் புத்தகத்தை திறந்து படித்தால் தூக்கம் வரும். அதற்காக கவலைப்பட வேண்டாம். இதேபோன்று நாடாளுமன்றத்திலும் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறவர்கள் உள்ளனர். அவர்களால் ஜனாதிபதி உரையின் மீது கவனம் செலுத்த முடியாது.

அந்நேரம் மொபைலில் செய்திகளை பார்த்து கொண்டும், விளையாடி கொண்டும் இருப்பார்கள். அவர்கள் இந்த குழந்தைத்தனமான மனோபாவத்தில் இருந்து விடுபட யோகா பயிற்சி உதவும்’’ என்று கூறினார். கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மொபைலை பார்த்து கொண்டிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இது குறித்தே ராம் மாதவ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாய் படம் வெளியிட்ட ராகுலுக்கு கண்டனம்

இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் பிரிவு பயிற்சியாளர்களும், நாய்களும் யோகா செய்யும் படத்தை தனது டிவிட்டரில் `புதிய இந்தியா’ என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். இது குறித்து பாஜ துணைத் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே கூறிய போது, ``சர்வதேச யோகா தினம் பற்றி பெரிய அரசியல் தலைவர் ஒருவர் இப்படி கீழ்த்தரமாக விமர்சித்தது  மிகவும் வேதனையளிக்கிறது. இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தில் தோன்றிய எதனையும் கேலி செய்வதும், பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்பதும் அவர்களின் வழக்கம்,’’ என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பதிவில், `இது பாதுகாப்பு படையினரை இழிவுபடுத்தும் செயலாகும்’ என பதிவிட்டுள்ளார்.

Tags : talks , Yoga ,everyone,PM Modi talks
× RELATED சுகப்பிரசவத்திற்கு அரசு...