×

ஏழை, எளிய மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதுதான் அரசு வேலை அபார்ட்மென்ட் வாசிகளுக்கு தண்ணீர் தர முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: ஏழை, எளிய மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதை தான் இன்றைக்கு அரசாங்கம் முதல் வேலையாக செய்து கொண்டிருக்கிறது. அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள், வசதியானவர்கள் தங்களுடைய தண்ணீர் தேவையை  கூடுதல் தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி  கூறினார். தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னை மற்றும் அதை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள், துறை அதிகாரிகள், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: இன்றைய தினம், தமிழகத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்னை பற்றி ஆலோசிக்கப்பட்டது.   நிலத்தடி நீர் குறைந்ததன் காரணத்தினால், சென்னையை பொறுத்தவரைக்கும்  மெட்ரோ வாட்டர் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு தினந்தோறும் 525 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செங்குன்றம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய நான்கு ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத நிலையில் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கு இன்றைக்கு ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.  இதன்மூலம் ஆறுவார காலத்திற்கு தினந்தோறும் 10 எம்எல்டி தண்ணீர் சென்னைக்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது, அதற்காக ₹65 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம். சென்னை மாநகரத்தை பொறுத்தவரைக்கும், முடிந்த அளவிற்கு அரசு துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தண்ணீரை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எல்லா மண்டலத்துக்கும் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, எங்கெங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறது என்று கருதுகிறார்களோ அங்கெல்லாம் கூடுதல் லாரிகளை இயக்கி, அந்த பகுதி மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தை பொறுத்தவரைக்கும் தினந்தோறும்  800 லாரிகள் மூலம் 9800 லாரி நடைகள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு ₹158.42 கோடியும், நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.36 கோடியும், நகராட்சி நிர்வாகத்திற்கு ₹56 கோடியும், பேரூராட்சி துறைக்கு ₹16.32 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் நீர் கொண்டுவருவதாக சொல்கிறீர்கள்?  எங்கிருந்து எடுக்கிறீர்கள்? ஜோலார்பேட்டையில் இருந்து ஏற்கனவே  திட்டம்  தீட்டப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து  தண்ணீர் கொண்டுவந்து  சேமித்து கொடுக்கிறார்கள். ஏற்கனவே திட்டம் தீட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கேரளாவில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா? கேரளாவில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.  கேரளாவில் இருந்து 2 எம்எல்டி தண்ணீர் தருவதாகக் கூறியுள்ளார்கள், அதுவும், தினமும் இல்லை, ஒரு நாளைக்குத்தான் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கேரளா முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருந்தாலும், 2 எம்எல்டி தண்ணீர் என்பது போதாது. தினந்தோறும் சென்னைக்கு 525 எம்எல்டி தந்து கொண்டிருக்கிறோம். தினந்தோறும் 2 எம்எல்டி தண்ணீர் தந்தால் நமக்கு சாதகமாக இருக்கும், மக்களுக்கு நன்மை பயக்கும். இதுகுறித்து இனிமேல் தான் கடிதம் எழுத வேண்டும். அவர்கள் தருவதாக கூறியிருக்கிறார்கள், அதை வரவேற்கிறோம். இருந்தாலும், தினந்தோறும் 2 எம்எல்டி தண்ணீர் கொடுத்தால் மக்களுக்கு ஓரளவிற்கு தண்ணீர் கிடைக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ள நிலை என்ன?  நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கு ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா? சென்னையை பொறுத்தவரைக்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் என நான்கு ஏரிகள் இருக்கின்றன.  இந்த நான்கு ஏரிகளையும் அரசுக்கு வருவாய் கிடைக்கின்ற விதமாக டெண்டர் விடப்பட்டு மூன்று ஏரிகளுடைய பணி துவங்கப்பட்டு விட்டது. பூண்டி ஏரியை பொறுத்தவரைக்கும் தனியார் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றதால், அந்த பணிகள் நடைபெறவில்லை. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு, பொதுப்பணித் துறைக்கு 39,202 ஏரிகள் இருக்கின்றன. இதில் பொதுப்பணித்துறைக்கு மட்டும் 14,000 ஏரிகள் இருக்கின்றன. இந்த 14,000 ஏரிகளையும் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக படிப்படியாக தூர்வாரி, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய அளவிற்கு கொள்ளளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ வாட்டர் குடிநீருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் 25 நாட்களுக்கு குறையாமல் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. தனியார் லாரிகள் ஐந்தாயிரம், எட்டாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றார்கள். வாட்டர் மாபியா தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை எப்படி கட்டுப்படுத்த போகின்றீர்கள்?

மக்கள் அன்றாட தேவைக்கு அல்லல்படுகின்ற இந்த நேரத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்பொழுது ஒரு அபார்ட்மெண்ட்டிற்கு 10 லாரிகள் பதிவு செய்தால் எப்படி தண்ணீர் கொடுக்க முடியும்? அனைத்து தரப்பு மக்களுக்கும் இதில் உரிமை உள்ளது, தனக்கு மட்டும் தண்ணீர் கிடைத்தால் போதுமென்று இருக்கக்கூடாது. வசதி படைத்தவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து, தண்ணீரை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், அவர்களுக்கு இருக்கக்கூடிய நிலங்களில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த முடியும். ஆனால், பணம் கொடுத்துத் தண்ணீரை பெறமுடியாத நிலையில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதைத் தான் இன்றைக்கு அரசாங்கம் முதல் வேலையாக செய்து கொண்டிருக்கிறது. அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு, அந்த அபார்ட்மெண்டிலேயே சர்வீஸ் சார்ஜ் வாங்குகின்றார்கள். அதை பயன்படுத்தி அவர்களுக்கு தண்ணீர் பெற்றுக் கொடுப்பது அவர்களுடைய கடமை. இருக்கின்ற தண்ணீரை வைத்து நடுத்தர மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

வசதியானவர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப கூடுதல் தொகை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் மற்றவர்களும் கூடுதல் தொகை கொடுக்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்திவிடுவதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? லாரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏற்கனவே கூட்டம் கூட்டப்பட்டு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் புகார் வந்த காரணத்தினால், உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், லாரி உரிமையாளர்களுடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அக்கூட்டத்தில் சீரான தொகை வசூலிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படும். அதேபோல, அனைத்து மக்களும் வறட்சியை கருத்தில் கொண்டு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்ற அன்பான வேண்டுகோளை மக்களிடத்திலே வைக்கின்றேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்களுக்கு 2 லாரி தண்ணீர் முதல்வர் எடப்பாடி புதிய விளக்கம்

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள 30 அமைச்சர்கள் வீடுகளுக்கு தினசரி 2 லாரி தண்ணீர் தாராளமாக சப்ளை செய்யப்படுகிறது என்று தினகரன் பத்திரிகையில் இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது. இதுபற்றி முதல்வரிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த செய்தியை அவர் மறுக்கவில்லை. அதற்கு பதில் புதிய விளக்கத்தை கூறினார். அமைச்சர் வீடுகளுக்கு தினந்தோறும் 2 லாரி தண்ணீர் செல்கின்றது என்று செய்திகள் வந்துள்ளது பற்றி...? உங்களுக்கு எப்படி தண்ணீர் கிடைக்கின்றதோ அதுபோலத்தான் எல்லோருக்கும்  கிடைக்கிறது. இன்றைக்கு, நேற்றல்ல, இது எல்லா காலத்திலும் கொடுக்கிறார்கள்.  எல்லா அமைச்சர்களுக்கு என்றால் அமைச்சர்களுக்கு மட்டுமல்ல. அமைச்சர்  வீட்டில் நான்கு பேர்கள் தான் இருக்கிறார்கள். என் வீட்டில் 2 மாதங்களாக  நான் மட்டும்தான் இருக்கிறேன். நான் 2 லாரி தண்ணீரா செலவழிக்கின்றேன்? இது  தவறான கருத்து.

ஒரு முதலமைச்சர்  மற்றும் அமைச்சர்கள் வீட்டில் பல  ஊழியர்கள் இருக்கிறார்கள், பலர் வந்து செல்கின்றனர். மேலும் என் வீட்டில்   தங்குபவர்களுக்கும், வருபவர்களுக்கும் உணவு மற்றும் தண்ணீர் கொடுத்துக்  கொண்டிருக்கிறேன். ஒருவர் இரண்டு லாரி செலவு செய்ய முடியுமா? நீங்களே  மனசாட்சிப்படி சொல்லுங்கள். இது கடுமையான வறட்சி, அரசாங்கம் எவ்வாறு  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.  பருவமழை பொய்த்து விட்டது, இயற்கை பொய்த்து விட்டது. இந்த காலகட்டத்தில்  கூட நமக்கு கிடைக்க வேண்டிய நீராதாரமாக விளங்கக்கூடிய பூண்டி,  செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய நான்கு ஏரிகளும் வறண்டு  போய்விட்டது. இந்த வறட்சியான நிலையில் கூட மக்களுக்கு தேவையான  நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறோம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்  வீட்டிற்கு பலர் வந்து செல்வார்கள். அவர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றார்.

ஒரு பிரச்னை சம்பந்தமாக பேட்டி அளித்தது முதல்முறை

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று சுமார் 28 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த 28 மாதங்களில் வெளியூர் செல்லும்போது, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, கட்சி அலுவலகங்களில் நிருபர்களை சந்தித்து அடிக்கடி பேட்டி கொடுத்துள்ளார். ஆனால் தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்களை அழைத்து இதுவரை பேட்டி அளித்ததில்லை. கடந்த சில வாரங்களாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுவது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்தது. இதையடுத்து முதன்முறையாக தண்ணீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு முதல்வர் எடப்பாடி தலைமை செயலகத்தில் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா குடிநீர் தட்டுப்பாடு ஏன்?


அம்மா குடிநீர் அம்மாவினுடைய மிகப்பெரிய திட்டமாக இருந்தது. ஆனால்  தமிழக பஸ் டிப்போக்களில் இன்றைக்கு அம்மா குடிநீர் இல்லை, கேட்டால்,  வாரக்கணக்காக அம்மா குடிநீர் பாட்டில்கள் வரவில்லை என்கிறார்களே? குறிப்பிட்ட அளவு தண்ணீரைத்தான் நாம் இப்பொழுது உற்பத்தி செய்கின்றோம்.  இது மிகுந்த வறட்சியான காலமாக இருக்கின்ற காரணத்தினால், உற்பத்தி செய்வது  அனைத்தும் உடனடியாக தீர்ந்து விடுகின்றது. அம்மா குடிநீர் விலை குறைவாக  இருப்பதினால், மக்கள் அதிகமாக வாங்குவதால், குடிநீர் விரைவில் தீர்ந்து  விடுகிறது. அதேபோல, சில பத்திரிகைகளில் பள்ளிகளில், விடுதிகளில் தண்ணீர்  இல்லை என்று செய்திகள் வந்தது, அது தவறான செய்தி. அனைத்து விடுதிகளும்  இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது, அவற்றிற்குத் தேவையான தண்ணீரை அவர்கள்  முன்னேற்பாடு செய்து பயன்படுத்தி வருகின்றார்கள். அதேபோல, அனைத்து  பள்ளிகளுக்கும் தடையில்லாமல் தண்ணீர் வழங்கப்படுகிறது என்றார்.

Tags : residents ,apartment ,Government ,CM Edappadi Palanisamy , Providing water , poor and simple people , job of the residents
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...