×

ரஜினி கட்சி துவங்குவது தெய்வத்தின் செயல்... சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி

புவனகிரி: ரஜினி கட்சி தொடங்குவது தெய்வத்தின் செயல் என அவரது அண்ணன் சத்யநாராயணராவ் சிதம்பரத்தில் கூறினார். மேலும் நடராஜர் கோயிலில் நடந்த யாகத்திலும் அவர் பங்கேற்றார். கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்கள் விருப்பமாக இருக்கிறது. அதற்கேற்றாற்போல் ரஜினியும் வருகிற சட்டசபை தேர்தலுக்குள் கட்சி துவங்கி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் எனவும், சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும் கூறியிருந்தார். தற்போது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் சட்டப்பேரவை தேர்தலும் வரலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஜினி ரசிகர்கள், ரஜினிகாந்த் விரைவில் கட்சி துவங்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர்கள் சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடந்து வருகிறது.

ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த யாகத்தை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நடத்தி வருகின்றனர். இந்த யாகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ், அவரது உறவினர் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். அவர் முதல்வராக வேண்டும். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ வேண்டும் போன்ற நோக்கங்களுக்காக இந்த யாகம் நடத்தப்படுவதாக அவரது ரசிகர்கள் சார்பில் கூறப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி மரத்திற்கு அருகில் நடந்து வரும் இந்த யாகத்தின் முடிவில், ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலையும் பின்னர் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் பாபாஜி பிறந்த இடத்தில் உள்ள பாபாஜி அவதார கோயிலில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும் சத்யநாராயணராவ் பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து புவனகிரியில் ராகவேந்திரர் பிறந்த இடத்தில் உள்ள கோயிலில் நடைபெறும் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியிலும் சத்தியநாராயணராவ் பங்கேற்க உள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் யாகம் முடிந்த பின்பு ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவரும் நன்றாக வாழ வேண்டியும் எல்லோரும் பூரண உடல் நலத்தோடு இருக்க வேண்டியும். ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களும் நாடும் நன்றாக இருக்க வேண்டும். சீக்கிரம் மழை பெய்து தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும் என்பதற்கான நோக்கத்தில்தான் இந்த யாகம் நடந்தது. ரஜினி கட்சி துவங்குவதும், முதல்வராக வருவதும் தெய்வத்தின் செயல். ரஜினி அரசியலுக்கு வரட்டும் நல்லது செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வரை சந்தித்து தண்ணீர் கேட்பீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. அங்கும் 3 நாட்களுக்கு ஒரு முறை வண்டிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அங்கேயே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. அதனால் கேட்க வாய்ப்பில்லை. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்துள்ளார்கள். அதனால் விரைவில் தண்ணீர் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rajini Party ,Sathyanarayanarao ,Brother , Rajini, Party, Sathyanarayana Rao, Interview
× RELATED கிரிவலம் சென்று வந்தபோது சோகம்;...